/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
உள் இடஒதுக்கீடு கண்டித்து போராட்டம்; தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
/
உள் இடஒதுக்கீடு கண்டித்து போராட்டம்; தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
உள் இடஒதுக்கீடு கண்டித்து போராட்டம்; தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
உள் இடஒதுக்கீடு கண்டித்து போராட்டம்; தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
ADDED : செப் 10, 2025 10:07 PM
பெங்களூரு : எஸ்.சி., உள் இடஒதுக்கீட்டில் அநீதி நடந்ததாக கூறி, அரசுக்கு எதிராக பஞ்சாரா, போவி, கொரச்சா, கொரவா சமூகத்தினர் நேற்று போராட்டம் நடத்தினர். பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விதான் சவுதாவை முற்றுகையிட பேரணியாக சென்றவர்களை, போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகாவில், எஸ்.சி., சமூகத்திற்கு உட்பட்ட 101 துணை பிரிவுகளுக்கு, உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையிலான கமிட்டி, அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் எஸ்.சி., சமூகத்தின் சில பிரிவுகளுக்கு, இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை.
உள் இடஒதுக்கீட்டில் தங்களுக்கு அநீதி நடந்ததாக கூறி, பஞ்சாரா, போவி, கொரச்சா, கொரவா சமூகத்தினர், பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று காலை முதல் போராட்டம் நடத்தினர். நேற்று மதியம் பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, எம்.எல்.ஏ., பிரபு சவுஹான் உள்ளிட்டோர், போராட்ட களத்திற்கு சென்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர். சமூகங்களை பிரிக்கும் முயற்சியில், சித்தராமையா ஈடுபடுவதாக விஜயேந்திரா குற்றச்சாட்டு கூறினார். சிறிது நேரம் போராட்டத்தில் கலந்து கொண்டு புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில், போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர், திடீரென மண்ணெண்ணெயை எடுத்து உடல் மீது ஊற்றி, தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அந்த பெண்ணை மீட்டனர். அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் நேற்று மதியம் திடீரென, விதான் சவுதாவை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டு சென்றனர்.
அவர்களை இரும்பு தடுப்பு கம்பியை வைத்து போலீசார் தடுத்தனர். இதனால் போலீசார், போராட்டக்காரர்கள் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இரும்பு தடுப்பு கம்பியை பிடித்து, போராட்டக்காரர்கள் தள்ளினர். அனைவரையும் கைது செய்து பஸ், வேன்களில் போலீசார் ஏற்றினர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தால் சுதந்திர பூங்காவை சுற்றியுள்ள சாலைகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.