ADDED : செப் 05, 2025 11:08 PM

சிவகுமார், லட்சுமி ஹெப்பால்கர், பரமேஸ்வருக்கு எதிராக...
தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, ஏராளமான பெண்களின் உடல்களை புதைத்ததாக, பொய் புகார் அளித்த சின்னையா கைது செய்யப்பட்டார். அவரை பின்னால் இருந்து இயக்கும் கும்பலை கைது செய்யவும், எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவுக்கு, கர்நாடகாவில் உள்ள 40 மகளிர் சங்கங்கள், 'தர்மஸ்தலாவின் பெண்களை கொன்றது யார்?' என்ற தலைப்பில் கடிதம் எழுதி உள்ளனர்.
அதில் குறிப்பிட்டு உள்ளதாவது:
ஜூலை மாத துவக்கத்தில், தர்மஸ்தலா அறக்கட்டளையின் முன்னாள் துப்புரவு தொழிலாளி என்று அடையாளப்படுத்திக் கொண்ட நபர், தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண்களின் உடல்களை சட்டவிரோதமாக புதைத்ததாக கூறினார்.
இதை விசாரிக்க, ஜூலை 19ல் கர்நாடக அரசு, எஸ்.ஐ.டி.,யை அமைத்தது. பின், புகார் அளித்த நபர், சுட்டிக்காட்டிய இடங்களில், பள்ளம் தோண்டப்பட்டன. அத்துடன், மங்களூரில் எஸ்.ஐ.டி.,க்கென அலுவலகத்தை துவக்கி, பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்றும் அறிவுறுத்தினர்.
இதனால், நீண்ட காலமாக குடும்பத்தில் ஒருவரை இழந்தவரின் குடும்பத்தினர் மட்டுமின்றி சமூக ஆர்வலர்கள், எங்களை போன்ற சங்கத்தினரும் நீதி கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தனர்.
துரதிர்ஷ்டவசமாக விசாரணை துவங்கிய சில நாட்களில், இவ்விஷயம் ஊடகங்களில் தீவிரமாகவும், பெரும்பாலும் ஆபாசமாகவும் பேசப்பட்டு வருகிறது. இதன் விளைவால், உண்மையாகவும், பொறுப்புணர்வாகவும் இருக்க வேண்டிய விஷயம், மீண்டும் மிரட்டல், தந்திரம், நீதியை புதைக்கும் முயற்சியாக மாறி உள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள், எஸ்.ஐ.டி.,யிடம் புகார் அளித்தவர்கள், வயதான சுஜாதா பட் ஆகியோருக்கு எதிராக ஊடகத்தில் செய்திகள் வெளியானதால், மாநில மகளிர் ஆணையம் தலையிட்டு, ஆக., 28ம் தேதி வரை அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இப்பிரச்னையை அம்பலப்படுத்த முயற்சித்த, சுதந்திரமாக செயல்படும் ஊடக பத்திரிகையாளர்கள் , யு - டியூபர்கள், அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு, உண்மை வெளிவராமல் ஒடுக்கப்பட்டன.
எஸ்.ஐ.டி., விசாரணையில், புகார் அளித்தவர் திடீரென கைது செய்யப்பட்டார். அவர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்வதற்கு பதிலாக, ஏழு ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை விதிக்கும் குற்றங்களுக்காக அவரை கைது செய்தனர். இதன் மூலம், இவ்வழக்கு தொடர்பான சாட்சிகள், தகவல் தெரிவிப்பவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
எஸ்.ஐ.டி.,யை ஆரம்பத்தில் வரவேற்ற பா.ஜ.,வினர், இப்போது வகுப்புவாதமாக்க முயற்சிக்கின்றனர். பெண்களுக்கு எதிராக வன்முறையை கண்டிப்பதற்கு பதிலாக, 'கோடிக்கணக்கான ஹிந்துக்களின் மத உணர்வுகள் மீதான தாக்குதல்' என்று முத்திரை குத்துகிறது. தர்மஸ்தலா கோவில் அறக்கட்டளையுடன் சேர்ந்து ஒரு 'தர்ம யுத்தத்தை' துவங்கி உள்ளது.
இதற்கிடையில், மாநில காங்கிரஸ் அமைச்சர்களின் கருத்துகள் பரபரப்பை அதிகரித்துள்ளன. நியாயமான, நீதி விசாரணை குறித்த சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளன.
கடந்த மாதம் 14ம் தேதி துணை முதல்வர் சிவகுமார், 'தர்மஸ்தலா உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கூற்றுகள், கோவில் நகரின் பல நுாற்றாண்டுகள் பழமையான பாரம்பரியத்தை சேதப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்ட சதியின் ஒரு பகுதியாகும்' என்று கூறியதுடன், 'இந்த வழக்கை எந்த ஆதாரமம் இல்லாத 'காலி டப்பா' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தர்மஸ்தலாவுக்கு எதிராக தவறான தகவல் பிரசாரத்தை துவங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சிகளின் அழுத்தத்துக்கு மாநில அரசு அடிபணிந்துள்ளது. 'தர்மஸ்தலா குறித்து கருத்துகளை பதிவிடுவோர் மீது மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்' என, சமூக ஊடகத்தினருக்கு, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் எச்சரிக்கை விடுத்தார். அதுபோன்று, மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரும், துணை முதல்வர் சிவகுமாரின் கருத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.
எனவே, பெண்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நீங்கள் (சோனியா) உறுதி செய்ய வேண்டும்.
தர்மஸ்தலா பகுதியில் இயற்கைக்கு மாறான மரணங்கள், பாலியல் வன்கொடுமை வழக்குகளின் குழப்பமான விஷயங்களை விசாரிப்பதில், எஸ்.ஐ.டி., கவனம் செலுத்த வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். கடமை தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில காங்கிரஸ் தலைவர்கள், எஸ்.ஐ.டி.,யின் செயல்பாட்டையும், நியாயமான விசாரணையையும் குறைத்து மதிப்பிடும் அறிக்கைகள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
கடந்தாண்டு செப்டம்பர் 13ம் தேதி, கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, பொறுப்புணர்வை உறுதி செய்ய, சவுஜன்யா வழக்கில் குளறுபடியான விசாரணைக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தர்மஸ்தலா பெண்களுக்கு நீதி கிடைப்பதற்கு ஒரு அரசியல் தலைவராக, உங்களின் தலையீடு மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு கடிதத்தில் மகளிர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.