பி.ஜி., உணவில் புழு கிடந்ததால் நள்ளிரவில் பெண்கள் போராட்டம்
பி.ஜி., உணவில் புழு கிடந்ததால் நள்ளிரவில் பெண்கள் போராட்டம்
ADDED : ஜூன் 12, 2026 10:45 PM
பெங்களூரு: பி.ஜி., எனும் பேயிங் கெஸ்ட் மையம் ஒன்றில் அளிக்கப்பட்ட உணவில், புழு தென்பட்டது. இதை கண்டு கோபமடைந்த இளம்பெண்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரின், பசவேஸ்வர நகரில், அஞ்சனாத்ரி மகளிர் பி.ஜி., மையம் உள்ளது. இது, மகளிர் பி.ஜி., என்பதால், மாணவியர், பணிக்கு செல்லும் பெண்கள், வெளியூர்களில் இருந்து வந்த பெண்கள் என, பலரும் தங்கியுள்ளனர்.
சில நாட்களாகஇங்கு வழங்கப்படும் உணவு தரமாக இருக்கவில்லை. உணவில் புழுக்கள் தென்பட்டன. இது குறித்து, பி.ஜி., உரிமையாளரிடம் புகார் அளித்தும் பயன் இல்லை.
பெண்களுக்கு நேற்று முன் தினம் வழங்கப்பட்ட உணவிலும், புழுக்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, உரிமையாளரிடம் கேட்ட போது, 'கொடுத்ததை சாப்பிடுங்கள். இல்லாவிட்டால் இடத்தை காலி செய்யுங்கள்' என அலட்சியமாக பேசியுள்ளார்.
இவரது செய்கையால் கோபமடைந்த பெண்கள், நள்ளிரவு பி.ஜி.,யில் இருந்து வெளியே வந்து, சாலையில் நின்று, நியாயம் கேட்டு போராட்டம் நடத்தினர்.
'உணவு சுகாதாரமாக இல்லை. அது மட்டுமின்றி பி.ஜி.,யில் எங்களுக்கு சரியான பாதுகாப்பும் இல்லை. பி.ஜி., உரிமையாளரின் பெண்ணின் மகன், மகளிர் பி.ஜி.,க்குள் அனுமதியின்றி வருகிறார். பெண்கள் தங்கியுள்ள அறைக்குள் நுழைகிறார்.
'நள்ளிரவில் உள்ளே வந்து, மாடிக்கு சென்று மின் விளக்குகளை அணைக்கிறார். இதை பற்றி கேள்வி எழுப்பினால், தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்' என, பெண்கள் குற்றம்சாட்டினர்.
இவர்களின் குற்றச்சாட்டுகளை, பி.ஜி., உரிமையாளர் மறுத்துள்ளார். எனினும், அங்கு தங்கியுள்ள பெண்களுக்கு தொந்தரவு தரக்கூடாது என, அறிவுறுத்தினார். இது குறித்து, பசவேஸ்வர நகர் போலீசாருக்கும் தகவல் கூறப்பட்டது.
அவர்கள் அங்கு வந்து பெண்களை சமாதானம் செய்தனர். பி.ஜி., உரிமையாளரை எச்சரித்தனர். அவரும் இனி தரமான உணவு வழங்குவதாகவும், தன் மகனால் எந்த பிரச்னையும் வராது என, உறுதி அளித்தார்.
பெண்களின் போராட்டத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை உருவானது.
