ADDED : டிச 22, 2025 06:17 AM

- நமது நிருபர் -
பொருளாதாரத்தில் முன்னேற துடிக்கும் பெண்களுக்கு, மகளிர் சுய உதவிக்குழுக்கள் கை கொடுத்து உதவுகின்றன.
குறிப்பாக, கிராமப்புற பெண்களின் வாழ்க்கையின் அங்கமாக மாறியுள்ளது. மத்திய, மாநில அரசுகளும் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஊக்கப்படுத்தும் திட்டங்களை செயல் படுத்துகின்றன.
கர்நாடகாவில் ஆயிரக்கணக்கான மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. கிராம பஞ்சாயத்துகள் பல்வேறு பணிகளுக்கு, இவற்றின் உறுப்பினர்களை பயன்படுத்துகின்றன.
இந்திரா உணவகங்களை நடத்துவது, கிராமங்களில் சொத்து வரி வசூலிப்பது என, சில முக்கியமான பொறுப்புகளை ஒப்படைத்துள்ளது.
மகளிர் சுய உதவி குழுக்களும் திறமையாக செயல்படுகின்றன. இக்குழுவில் உள்ள பெண்களுக்கு உடைகள் தைப்பது, கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகின்றன. தற்போது மைசூரு மாநகராட்சி, பூங்காக்களின் நிர்வகிப்பு பொறுப்பை மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து, மைசூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மைசூரில் 520க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன. இவற்றில் 300க்கும் மேற்பட்ட பூங்காக்களை, ஒப்பந்ததாரர்கள் மேம்படுத்தி, நிர்வகிக்கின்றனர். வரும் நாட்களில் ஒப்பந்ததாரர்களுக்கு பதிலாக, மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் பூங்காக்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைக்க, மைசூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் பெண்களின் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கிறது. மைசூரு நகரின், அந்தந்த பகுதிகளில் செயல்படும் மகளிர் சுய உதவிக்ககுழுக்கள் மாநகராட்சியிடம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை ஆய்வு செய்து, பூங்காக்களை நிர்வகிக்க இந்த குழுக்கள் தகுதியானவையா, நிபந்தனைகளுக்கு கட்டுப்படுமா என்பதை தெரிந்து கொண்டு, அறிக்கை அளிக்கும். இதன் அடிப்படையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தேர்வு செய்யப்படும்.
ஏற்கனவே மைசூரு மாநகராட்சி, சோதனை முறையில் ஆறு மகளிர் சுய உதவிக்குழுக்களை தேர்வு செய்து, நகரின் பல இடங்களில் 10 பூங்காக்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளது.
வரும் நாட்களில் மேலும் பல பூங்காக்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும். இது பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவும்.
தினமும் காலை முதல், மாலை வரை பூங்காக்களை துாய்மைப்படுத்துவது, மரம், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, அலங்கார செடிகளை ட்ரிம் செய்வது, களை எடுப்பது உட்பட, அனைத்து பணிகளையும் சுய உதவிக்குழுக்களின் பெண்களே செய்வர்.
இதற்காக ஆண்டு தோறும், ஒவ்வொரு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும், தலா 30 லட்சம் ரூபாய் நிதி வழங்க ஆலோசிக்கப்படுகிறது. பூங்கா நிர்வகிப்புக்கு மத்திய அரசு 'அம்ருத் மித்ரா' திட்டத்தின் கீழ், நிதியுதவி வழங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

