ADDED : செப் 26, 2026 11:09 PM

- நமது நிருபர் -
துாக்கி வீசப்படும் ஆடைகளுக்கு புதிய வடிவம் கொடுக்கும், மங்களூரை சேர்ந்த, 'சுஜி மல்லிகே' மகளிர் குழுவினர், மாதம் 20 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டி வருகின்றனர்.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரை சேர்ந்த, 'ஹசிரு தல்' என்ற அமைப்பின் வழிகாட்டுதலின் கீழ், 'சுஜி மல்லிகே' என்ற மகளிர் சங்கம் தொடங்கப்பட்டது. இச்சங்கத்தினர் பழைய சேலைகள், ஜீன்ஸ், கந்தல் துணியில் இருந்து பைகள், மணி பர்சுகள் உட்பட, அன்றாட பயன்பாட்டுக்கு தேவையான பொருட்களை தயாரிக்கின்றனர்.
மறுசுழற்சி தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள, 10 கிராம பஞ்சாயத்துகளை, கழிவுகள் இல்லாத பஞ்சாயத்துகளாக மாற்ற, ஹசிரு தல் அமைப்பு திட்டமிட்டுள்ளது. இந்த அமைப்பு, கடந்த 3 ஆண்டுகளாக மகளிர் குழுக்களுடன் இணைந்து, கழிவுகளில் இருந்து கிடைக்கும் உரம், உலர்ந்த கழிவுகளை மறுசுழற்சிக்கு அனுப்பியது.
இருப்பினும், குப்பை குவியலில் குவிந்து கொண்டிருந்த பழைய ஆடைகளை என்ன செய்வது என்பது பெரிய சவாலாக இருந்தது. மங்களூரில் ஜவுளி மறுசுழற்சி மையங்கள் இல்லாததால், அவை குப்பை கிடங்கிற்கு சென்று சுற்றுச்சூழலை மாசுபடுத்தின.
ஹசிரு தல் அமைப்பு தலைவர் நாகராஜ் கூறியதாவது:
தையலில் ஆர்வம் கொண்ட கிராமப்புற பெண்களை ஒன்று திரட்டி, அவர்களுக்கு, 15 நாட்கள் தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. முற்றிலும் பயன்படுத்த முடியாத துணிகளை துவைத்து, இஸ்திரி செய்வது, பழைய துணிகளுக்கு புதிய வடிவமைப்பு கொடுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்த பெண்களை கொண்டு, சுஜி மல்லிகே என்ற சுதந்திரமான சங்கம் உருவாக்கப்பட்டது.
இந்த சங்கத்தின் கீழ் வங்கி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லுாரிகள், பொதுமக்களிடம் இருந்து சேகரிப்பட்ட 5 டன் பழைய துணிகளை, நாங்கள் பைகளாக மாற்றி வருகிறோம்.
மக்கள், ஒரு துணிப்பையை, குறைந்தபட்சம் 10 முறையாவது மீண்டும் பயன்படுத்தினால், அந்த அளவு பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணில் சேராமல் தடுக்கப்படும். பொதுமக்களும், நிறுவனங்களும் அதிக ஆர்டர்களை வழங்கி, இப்பெண்களின் முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
20 பேர் பயிற்சி தற்போது, சுஜி மல்லிகே மேற்பார்வையாளராக உள்ள தீபிகா கூறியதாவது:
ஆரம்பத்தில் இந்த அமைப்பில், 10 பெண்களுக்கு மட்டுமே பயிற்சி அளிப்பது இலக்காக இருந்தது. தற்போது, 20 பெண்கள் பயிற்சி பெறுகின்றனர். பென்சில் பைகள், சிறு பைகள் செய்ய கற்றுக் கொண்ட பெண்கள், தற்போது மடிக்கணினி பைகள், பணப்பைகளை வடிவமைக்க தைக்க கற்றுக் கொண்டனர். வீட்டு வேலை முடிந்த பின், வீட்டில் இருந்துபடியே மாதம் 15 ஆயிரம் ரூபாய் முதல், 20 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்தில், டில்லியில் நடந்த, பாரத் டெக்ஸ் கண்காட்சியிலும் இக்குழுவினர் பங்கேற்றனர். சுற்றுச்சூழலுக்கு உகந்த கருத்தாக்கத்துக்காக, மத்திய அரசு பாராட்டியது.
