/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மர அம்பாரி ஜம்பு சவாரி பயிற்சி நிறைவு
/
மர அம்பாரி ஜம்பு சவாரி பயிற்சி நிறைவு
ADDED : செப் 29, 2025 06:09 AM

மைசூரு ஜம்பு சவாரியை ஒட்டி, மர அம்பாரியை சுமக்கும் பயிற்சி நேற்றுடன் முடிந்தது.
மைசூரு தசராவுக்கு முதல்கட்டமாக ஒன்பது யானைகளும், இரண்டாம் கட்டமாக, ஐந்து யானைகளும் வந்தன. யானைகளுக்கு தினமும் அரண்மனை வளாகத்தில் இருந்து பன்னிமண்டபம் வரை நடைபயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
யானைகள் அசைந்து ஆடியபடி செல்லும் காட்சியை, சுற்றுலா பயணியர் பார்த்து கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
நடைபயிற்சியின் ஆரம்ப நாட்களில், யானைகளின், 'கேப்டனாக' கருதப்படும் அபிமன்யு தலைமையில் மற்ற யானைகள் பின்தொடர்ந்தன. அதன்பின், தனஞ்செயா, சுக்ரீவா ஆகிய யானைகள் தலைமை ஏற்றன. அதுபோன்று 400 கிலோ எடை கொண்ட மணல் மூட்டையை சுமக்கும் பயிற்சியும் இம்மூன்று யானைகளுக்கு அளிக்கப்பட்டது.
இது தவிர, பீரங்கி வெடி சத்தத்துக்கு பயப்படாமல் இருப்பதற்காகவும், தசரா கண்காட்சி மைதானத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. யானைகள் மட்டுமின்றி, போலீசாரின் குதிரை படைக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஜம்பு சவாரி தினம் நெருங்கி வருவதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. யானைகளின் அருகில் நெருங்க யாருக்கும் அனுமதியில்லை. யானைகள் செல்லும் பாதையில், கூடுதல் போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
தசராவின் போது மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், சுற்றுலா பயணியர் சிலர், மரத்தில் செய்யப்பட்ட அம்பாரியை சுமந்து யானையின் நடைபயிற்சியை பார்த்த பின், தங்கள் ஊர்களுக்கு சென்று விடுவர்.
அவர்களுக்காகவே நேற்று மரத்தில் செய்யப்பட்ட அம்பாரியை சுமக்கும் பயிற்சியில் அபிமன்யு யானை ஈடுபட்டது.
இதையடுத்து மரத்தில் செய்யப்பட்ட அம்பாரி சுமக்கும் பயிற்சி முடிவடைந்தது.
இன்று முதல் வழக்கம் போல் அம்பாரி இல்லாமல், சாதாரணமாக காலை, மாலையில் நடைபயிற்சி இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.