துங்கபத்ரா அணையில் புதிய மதகுகள் பொருத்தும் பணி நிறைவு
துங்கபத்ரா அணையில் புதிய மதகுகள் பொருத்தும் பணி நிறைவு
ADDED : ஏப் 26, 2026 11:52 PM

கொப்பால்: துங்கபத்ரா அணையின் 33 மதகுகளுக்கு, புதிய கதவுகள் பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது.
கொப்பால் - விஜயநகரா மாவட்ட எல்லையில் முனிராபாத்தில் துங்கபத்ரா அணை அமைந்து உள்ளது. கொப்பல், விஜயநகரா, பல்லாரி, ராய்ச்சூர் ஆகிய நான்கு மாவட்டங்கள், ஆந்திராவின் பல கிராமங்களுக்கு இந்த அணை தண்ணீர் தான் உயிர்நாடியாக உள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு தென்மேற்கு பருவமழையால் அணை முழு கொள்ளவை எட்டியது. அந்த ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி அணையின் 19வது மதகின் கதவு உடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. கதவு இல்லாத மதகு வெளியாக மூன்று நாட்களில் 35 டி.எம்.சி., தண்ணீர் வெளியேறியது.
ஆந்திராவை சேர்ந்த பிரபல இன்ஜினியர் கண்ணையா நாயுடுவின் வழிகாட்டுதல்படி, 19வது மதகிற்கு தற்காலிக கதவு பொருத்தப்பட்டது. அணையில் உள்ள மதகின் கதவுகளை நீர்பாசன துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, பெரும்பாலான கதவுகள் மோசமான நிலையில் இருப்பது தெரிந்தது. இதனால் 33 மதகுகளுக்கும் புதிய கதவுகள் பொருத்தும் பணிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி துவங்கியது.
துங்கபத்ரா அணையின் வாரிய செயலர் ஒ.ஆர்.கே.ரெட்டி மேற்பார்வையில் நடந்த பணியில் 100க்கும் மேற்பட்ட இன்ஜினியர்கள், 1,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரவும், பகலுமாக வேலை செய்தனர். கிட்டத்தட்ட 121 நாட்கள் நடந்த பணிகள் நிறைவு பெற்று, நேற்று முன்தினத்துடன் 33 மதகுகளுக்கும் புதிய கதவுகள் பொருத்தப்பட்டன.
ஒ.ஆர்.கே.ரெட்டி கூறுகையில், ''முக்கிய பணியான மதகுகளுக்கு கதவு பொருத்தும் பணி நிறைவு பெற்று உள்ளது. கதவுகளுக்கு சங்கிலி இணைப்பது, வர்ணம் பூசும் பணிகள் பாக்கி உள்ளது. அதுவும் மே மாதத்திற்குள் முடிந்து விடும். நல்ல மழை பெய்து அணை முழுமையாக நிரம்பினால் 15 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு, அணை தண்ணீர் மூலம் நீர்பாசன வசதி கிடைக்கும்,'' என்றார்.
