/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பள்ளிகளில் சமையல் அறைகளை சீரமைக்கும் பணிகள் மந்தம்
/
பள்ளிகளில் சமையல் அறைகளை சீரமைக்கும் பணிகள் மந்தம்
பள்ளிகளில் சமையல் அறைகளை சீரமைக்கும் பணிகள் மந்தம்
பள்ளிகளில் சமையல் அறைகளை சீரமைக்கும் பணிகள் மந்தம்
ADDED : செப் 04, 2025 11:12 PM
பெங்களூரு: கர்நாடகாவில் 8,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயன்படுத்த முடியாத அளவுக்கு, மதிய உணவு தயாரிக்கும் சமையல் அறைகள் மோசமான நிலையில் உள்ளன. இவற்றை 'நரேகா' திட்டத்தின் கீழ் புதுப்பிக்கும் பணிகளும் மந்தமாக நடக்கின்றன.
மாநிலத்தின் எந்தெந்த பள்ளிகளின் சமையல் அறைகள் சிதிலமடைந்துள்ளன என்பது குறித்து, பள்ளி கல்வித்துறை கடந்தாண்டு ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வில், 8,533 சமையல் அறைகள் மோசமாக இருப்பது தெரிய வந்தது.
அனைத்து சமையல் அறைகளையும், நரேகா திட்டத்தின் கீழ் புதுப்பிக்கும்படி, அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டது.
நடப்பாண்டு ஜனவரியில் உத்தரவிட்டும், சமையல் அறைகளை சீரமைப்பதில் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் கட்டுவதில் ஆர்வம் காட்டவில்லை என, பள்ளி தலைமை ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுவரை 500 பள்ளிகளின் சமையல் அறைகள் கூட சீரமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் எரிச்சல் அடைந்த கல்வித்துறை, மாவட்ட நிர்வாகங்களுக்கு நினைவூட்டி, உத்தரவு பிறப்பிக்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கர்நாடகாவின் 46,000க்கும் மேற்பட்ட, அரசு, அரசு நிதியுதவி பெறும் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, 48 லட்சம் சிறார்கள் கல்வி பயில்கின்றனர்.
இவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில், மதிய உணவு திட்டத்தின் கீழ், மதிய உணவு வழங்கப்படுகிறது.
சில நகர்ப்பகுதிகளில், இஸ்கான், அதம்ய சேத்தனா தொண்டு அமைப்புகள் மூலம், பள்ளி சிறார்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.
பெரும்பாலான கிராமப்புற பகுதிகளின், அனைத்து பள்ளிகளில், அந்தந்த பள்ளிகளிலேயே மதிய உணவு தயாரிக்கப்படுகிறது.
மதிய உணவு தயாரிக்க உணவு தானியங்கள், பாத்திரங்கள், சமையல் காஸ் சிலிண்டர், சுகாதாரமான சமையல் அறைகள் அவசியம்.
இதை கருத்தில் கொண்டு, 2025 - 26ம் ஆண்டில் சமையல் அறைகளை நரேகா திட்டத்தின் கீழ் புதுப்பிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.