/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாக்கடையை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி தொழிலாளர் பலி
/
சாக்கடையை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி தொழிலாளர் பலி
சாக்கடையை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி தொழிலாளர் பலி
சாக்கடையை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி தொழிலாளர் பலி
ADDED : ஜூலை 22, 2025 04:37 AM

பெங்களூரு: சுத்தம் செய்வதற்காக, சாக்கடைக்குள் இறங்கியபோது விஷ வாயு தாக்கி ஒருவர் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
பெங்களூரு, ஆஷ்ரயா நகரில் புட்டசாமி, 32. இவர் கூலி வேலை செய்கிறார். ஆஷ்ரயா நகரின் இந்திரா உணவகம் அருகில் உள்ள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. புட்ட ராஜுவும், அந்தோணி, 35, என்பவரும் நேற்று முன் தினம் இரவு 7:00 மணியளவில், சாக்கடையை சுத்தம் செய்வதற்காக உள்ளே இறங்கினர்.
அரைமணி நேரம் உள்ளே பணியாற்றியதில், இருவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சோர்வடைந்தனர். இருவரும் வெளியே வந்தனர். அவர்களுக்கு அப்பகுதியினர் மோர் கொடுத்தனர். மருத்துவமனையில் சேரும்படி கூறியும், புட்டசாமி வீட்டுக்குச் சென்றுவிட்டார். அந்தோணி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுகிறார்.
வீட்டுக்கு சென்ற புட்டசாமி, உடல் சோர்வால் உறங்க சென்றார். நேற்று காலை பார்த்தபோது அவர் இறந்து கிடந்தார். தகவலறிந்து அங்கு வந்த ஆர்.எம்.சி., யார்டு போலீசார், புட்டசாமி உடலை மீட்டனர். விசாரணை நடத்துகின்றனர். விஷ வாயு தாக்கியதில் அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து, பெங்களூரு வடக்கு மண்டல டி.சி.பி., பாபா சாஹேப் நேமகவுடா அளித்த பேட்டி:
புட்டசாமியையும், அந்தோணியையும் சாக்கடைக்குள் இறக்கியது யார் என்பது தெரியவில்லை. அப்பகுதியினரே பணத்தாசை காட்டி, சாக்கடையை சுத்தம் செய்ய வைத்திருக்கலாம் என, சந்தேகிக்கிறோம். தற்போது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். கூலி வேலை செய்த புட்டசாமி, இறந்துவிட்டதாக நேற்று காலை தகவல் வந்தது. சாக்கடைக்குள் இறங்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்துகின்றனர்.
சம்பவம் குறித்து, இன்னும் யாரும் புகார் அளிக்கவில்லை. புகார் அளித்த பின் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். கழிவுநீர் சாக்கடைகளை சுத்தம் செய்ய, மனிதர்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதை மீறி நபர்களை சாக்கடைக்குள் இறக்கியுள்ளனர். இதற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.