ADDED : மே 24, 2026 02:27 AM

- நமது நிருபர் -
இன்றைய கால கட்டத்தில், அவரவர் வாழ்க்கையை பார்த்து கொள்வது, பெரும்பாடாக உள்ளது. மற்றவருக்கு உதவ நேரமும் இல்லை; மனமும் இல்லை.
இத்தகைய காலத்திலும், கூலித்தொழிலாளர்கள் சேர்ந்து, ஏழை விதவை பெண்ணுக்கு வீடு கட்டிக்கொடுத்து, மனிதநேயம் இன்னும் உயிரோடு உள்ளது என்பதை, நிரூபித்துள்ளனர்.
விஜயபுரா நகரின், ஷஹாபேட்டையில் வசிப்பவர் கஸ்துாரி ருகடி, 35. இவருக்கு திருமணமாகி மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன், இவரது கணவர் இறந்து விட்டார்.
விதவையான கஸ்துாரி, குழந்தைகளுடன் சிதிலமடைந்த குடிசையில் வசித்தார். குழந்தைகளை வளர்க்க, வீட்டு வேலைக்கு செல்ல துவங்கினார்.
துரதிருஷ்ட வசமாக, அவரும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். நடமாட முடியாத நிலையில், மற்றவரின் உதவியை எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவானது.
குடும்பத்தை காப்பாற்ற, கஸ்துாரியின், 14 வயது மூத்த மகன், பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டு பணிக்கு செல்கிறார். கிடைக்கும் பணத்தில் தாய் மற்றும் சகோதரிகளை பார்த்து கொள்கிறார்.
இவர்களின் குடிசை வீடு, இடியும் அபாயத்தில் இருந்தது. சரி செய்யும் வசதி அவர்களுக்கு இல்லை. அவர்களின் நிலையை கண்டு, அங்கு வசிக்கும் கூலி தொழிலாளிகள் உதவ விரும்பினர்.
'விஜயபுரா யூத் கவரேஜ்' தொண்டு அமைப்பின் உதவியுடன் நிதி திரட்டி, கஸ்துாரி குடும்பத்தினருக்கு வீடு கட்டி கொடுத்தனர். நன்கொடையாக கிடைத்த பணத்தில், கட்டட கட்டுமான பொருட்கள் வாங்கப்பட்டன.
தொண்டு அமைப்பில் உள்ள மேஸ்திரிகள், கட்டுமான தொழிலாளர்களே இலவசமாக வீட்டை கட்டி முடித்தனர்.
விஜயபுரா யூத் கவரேஜ் உறுப்பினர் மெஹபூப் பக்வான் கூறியதாவது:
கஸ்துாரி குடும்பத்தின், துயரமான நிலையை கண்டு, அவருக்கு உதவ முடிவு செய்தோம். எங்கள் அமைப்பில் ஆட்டோ ஓட்டுநர்கள், காய்கறி வியாபாரிகள், கூலி தொழிலாளிகள், பெயின்டர்கள், மெக்கானிக்குகள் என, பலர் உள்ளனர். அவர்களிடம் நிதி திரட்டி, கஸ்துாரிக்கு வீடு கட்டி கொடுத்தோம்.
நாங்கள் டிரஸ்ட் அமைத்துள்ளோம். மாதந்தோறும் எங்கள் அமைப்பின் உறுப்பினர்கள், தலா, 100 ரூபாய் நன்கொடை வழங்குகின்றனர்.
இது போன்று திரட்டப்படும் நிதியில், ஒவ்வொரு மாதமும், தலா ஐந்து ஏழை குடும்பங்களுக்கு, மளிகைப்பொருட்கள் வழங்குகிறோம். தேவை உள்ளவர்களுக்கு நிதியுதவியும் செய்கிறோம்.
எங்களை பொருத்த வரை, மனித நேயத்தை தவிர, வேறு எதுவும் முக்கியம் அல்ல. அனைத்து சமுதாயங்களின் மக்களும், எங்களுடன் கைகோர்த்துள்ளனர்.
எங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் யாரும், வசதியானவர்கள் அல்ல. ஆனால், இதயத்தில் பணக்காரர்கள். நாங்கள் பிரசாரத்துக்காக எதையும் செய்யவில்லை. சமுதாயத்துக்கு முடிந்த நன்மைகளை செய்ய வேண்டும் என்பதே, எங்களின் குறிக்கோள்.
இவ்வாறு அவர் கூறினார்.
