தர்மஸ்தலாவில் பள்ளம் தோண்டியோருக்கு 9 மாதங்கள் ஆகியும் கூலி வழங்கவில்லை
தர்மஸ்தலாவில் பள்ளம் தோண்டியோருக்கு 9 மாதங்கள் ஆகியும் கூலி வழங்கவில்லை
ADDED : மே 12, 2026 11:45 PM
மங்களூரு: தர்மஸ்தலாவில், 17 இடங்களில் பள்ளம் தோண்டியவர்களுக்கு, ஒன்பது மாதங்கள் ஆகியும், கூலி வழங்கப்படவில்லை. எஸ்.ஐ.டி., - கிராம பஞ்சாயத்து அலட்சியத்தால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாக, சின்னையா என்பவர் அளித்த புகாரில், எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழுவை அரசு அமைத்தது.
சின்னையா அடையாளம் காட்டிய, 17 இடங்களில் கடந்த ஆண்டு ஜூலை 29ம் தேதியில் இருந்து, ஆகஸ்ட் 13ம் தேதி வரை பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் எலும்பு கூடுகளோ, மண்டை ஓடுகளோ சிக்கவில்லை.
எஸ்.ஐ.டி., நடத்திய விசாரணையில் சின்னையா உட்பட ஆறு பேர், தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவில் பெயரை களங்கப்படுத்த பொய் புகார் அளித்தது தெரிந்தது. அவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், 17 இடங்களில் பள்ளம் தோண்டி, தற்போது 9 மாதங்கள் ஆகி விட்டது. பள்ளம் தோண்டிய தொழிலாளர்களுக்கு கூலியும், ஜே.சி.பி., கனரக இயந்திரங்களுக்கு வாடகையும் கொடுக்கப்படவில்லை.
தொழிலாளர்களின் கூலி, இயந்திரங்கள் வாடகைக்கு இரண்டு லட்சம் ரூபாயை, தர்மஸ்தலா கிராம பஞ்சாயத்திடம் வழங்கியதாக எஸ்.ஐ.டி., கூறுகிறது. ஆனால் தங்களுக்கு எந்த பணமும் வரவில்லை என்று, கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.
இதனால் மழையிலும், வெயிலிலும் பணியாற்றிய ஊழியர்கள் வருத்தம் அடைந்து உள்ளனர். யாராவது தங்களுக்கு கூலி கொடுத்தால் சரி என்று கூறுகின்றனர்.
