யதீந்திராவுக்கு உங்கள் ஆசி வேண்டும்: வருணா மக்களிடம் சித்தராமையா உருக்கம்
யதீந்திராவுக்கு உங்கள் ஆசி வேண்டும்: வருணா மக்களிடம் சித்தராமையா உருக்கம்
UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 07:54 PM
மைசூரு: ‘‘என் மகன் யதீந்திராவுக்கும் உங்கள் ஆசி வேண்டும்,’’ என்று, வருணா மக்கள் முன்பு சித்தராமையா உருக்கமாக பேசினார்.
முன்னாள் முதல்வர் சித்தராமையா, மைசூரின் வருணா தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். நேற்று அவர் வருணாவுக்கு சென்றிருந்தார்.
அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:
உங்கள் ஆசிர்வாதத்தால் தான் வருணா தொகுதியில் இருந்து, மூன்று முறை எம்.எல்.ஏ., ஆனேன். அதில் இரண்டு முறை முதல்வராக பணியாற்றி உள்ளேன். உங்களை எப்போதும் மறக்கவே மாட்டேன்.
எனக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் பதவி காலம் உள்ளது. நான் எம்.எல்.ஏ.,வாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி உங்களுக்காக தொடர்ந்து சேவை செய்வேன். எனது 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் வெற்றி, தோல்வியை கண்டுள்ளேன். எட்டு முறை எம்.எல்.ஏ., ஆகியுள்ளேன். எனது பணியில் திருப்தி அடைந்து உள்ளேன். என்னை போன்று யதீந்திராவுக்கும், உங்கள் ஆசி வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் இருந்தவர்கள் 2028 தேர்தலிலும் போட்டியிடும்படி சித்தராமையாவிடம் வலியுறுத்தினார். ஆனால் அவர் எந்த பதிலும் அளிக்காமல் கையெடுத்து கும்பிட்டு தனது பேச்சை முடித்து கொண்டார்.
