/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதல்வராக தகுதியுள்ளவர் சதீஷ் என்ற யதீந்திரா கருத்தால் சலசலப்பு!: பதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் அமைச்சர்கள் அதிருப்தி
/
முதல்வராக தகுதியுள்ளவர் சதீஷ் என்ற யதீந்திரா கருத்தால் சலசலப்பு!: பதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் அமைச்சர்கள் அதிருப்தி
முதல்வராக தகுதியுள்ளவர் சதீஷ் என்ற யதீந்திரா கருத்தால் சலசலப்பு!: பதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் அமைச்சர்கள் அதிருப்தி
முதல்வராக தகுதியுள்ளவர் சதீஷ் என்ற யதீந்திரா கருத்தால் சலசலப்பு!: பதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் அமைச்சர்கள் அதிருப்தி
ADDED : அக் 23, 2025 11:11 PM

கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் சர்ச்சை, மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளது. காங்கிரஸ் அரசு அமைந்து, வரும் நவம்பரில் இரண்டரை ஆண்டுகள் முடிவடைகின்றன. இதை முன்னிட்டு, மாநிலத்தில் முதல்வர் மாற்றப்படுவார்.
அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும். பத்துக்கும் மேற்பட்டோரை அமைச்சரவையில் இருந்து நீக்கிவிட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க காங்., மேலிடம் திட்டமிட்டுள்ளதாக, சில அமைச்சர்கள், தலைவர்கள், காங்., - எம்.எல்.ஏ.,,க்கள் கூறுகின்றனர்.
பதவியை தக்க வைத்துக்கொள்ள அமைச்சர்களும், அமைச்சர் பதவியில் இடம் பிடிக்க எம்.எல்.ஏ.,க்களும் முட்டி மோதுகின்றனர். முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாரின் வீடுகளுக்கு நடையாய் நடக்கின்றனர். அவ்வப்போது டில்லிக்கும் பறக்கின்றனர். முதல்வர் மாற்றம், அமைச்சரவை மாற்றம் விவாதங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஊடகத்தினர் சந்திப்பிலும் முதல்வர் மாற்றம் பற்றியே பேசுகின்றனர்.
இதற்கிடையே, முதல்வர் சித்தராமையாவின் மகனும், காங்கிரஸ் எம்.எல்.சி.,யுமான யதீந்திரா கூறிய கருத்து, எரியும் தீயில் பெட்ரோலை ஊற்றியது போன்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
பெலகாவி, ராய்பாக் தாலுகாவின், கப்பலகுத்தி கிராமத்தில் கனகதாசர் சிலை திறப்பு விழா, நேற்று முன்தினம் நடந்தது. இதில் பேசிய யதீந்திரா, 'என் தந்தையான முதல்வர் சித்தராமையா, அரசியல் வாழ்க்கையில் இறுதி கட்டத்தில் இருக்கிறார். மாநிலத்துக்கு முற்போக்கு சிந்தனைகள் கொண்ட, சித்தாந்தங்கள் கொண்டுள்ள தலைமை வேண்டும். அனைவருக்கும் வழிகாட்டி, நடத்தி செல்லும் தலைவன் வேண்டும்.
'இப்படிப்பட்ட பொறுப்பை ஏற்கும் திறன், பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளிக்கு உள்ளது. அவர், தலைமை பொறுப்பை ஏற்பார். காங்கிரஸ் சித்தாந்தங்களில் நம்பிக்கை உள்ள தலைவர்கள், இளைஞர்களுக்கு இவர் முன் மாதிரியாக இருப்பார். சித்தாந்தத்துக்கு கட்டுப்பட்ட அரசியல்வாதிகள், மிகவும் அபூர்வம். ஆனால் சதீஷ் ஜார்கிஹோளி, கொள்கை பிடிப்புடன் செயல்படுகிறார்' என்றார்.
யதீந்திராவின் கருத்து, கட்சி மற்றும் அரசில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது கருத்தை முதல்வர் சித்தராமையா ஆதரவு அமைச்சர்கள் வரவேற்றுள்ளனர். சதீஷ் ஜார்கிஹோளி, முதல்வருக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவர். எந்த சர்ச்சைகளிலும் சிக்காதவர்.
ஒருவேளை நவம்பரில் முதல்வர் மாற்றம் நடந்தால், சதீஷ் ஜார்கிஹோளியின் பெயரை முன்மொழிய முதல்வர் முடிவு செய்துள்ளார். இதன் மூலம் சிவகுமார் முதல்வராவதை தடுப்பதே, முதல்வரது எண்ணமாகும்.
துணை முதல்வர் சிவகுமாரின் ஆதரவு கோஷ்டிக்கு, யதீந்திராவின் பேச்சு எரிச்சலை அளித்துள்ளது. அவருக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.
இது குறித்து, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், பெங்களூரில் நேற்று கூறியதாவது:
யதீந்திரா தன் கருத்தை கூறியுள்ளார். கொள்கை, சித்தாந்தங்களில் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, முதல்வர் சித்தராமையாவை போன்றவர். எனவே, சதீஷ் ஜார்கிஹோளி தலைமை பொறுப்பை ஏற்கலாம் என, யதீந்திரா கூறியுள்ளார். இதில் எந்த தவறும் இல்லை.
அவ்வப்போது தலைமை பதவி பற்றியே கேள்வி எழுப்பினால், பதில் அளிக்க முடியாது. யாராவது முதல்வர் ரேசில் இருக்கட்டும். ஆனால், இறுதி முடிவு எடுப்பது, கட்சி மேலிடம்தான். தலைமையை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடத்தப்படும். இங்கு வெளியாகும் கருத்துகளின் அடிப்படையில், மேலிடம் முதல்வரின் பெயரை அறிவிக்கும். இதுதான் காங்கிரசில் உள்ள நடைமுறை.
இவ்வாறு அவர் கூறினார்.
இவரை போன்று மேலும் பல மூத்த அமைச்சர்கள், முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். அவர்களுக்கும், யதீந்திராவின் பேச்சு அதிருப்தியை அளித்துள்ளது.

