/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வெளிநாட்டு வீரர்களின்றி கித்துார் ராணி உத்சவம்
/
வெளிநாட்டு வீரர்களின்றி கித்துார் ராணி உத்சவம்
ADDED : அக் 23, 2025 11:11 PM
பெலகாவி: பெலகாவியின் கித்துார் ராணி உத்சவத்தை ஒட்டி நடக்கும் பல போட்டிகளுக்கு மாநில அரசு குறைவான நிதி ஒதுக்கியதால், இம்முறை மல்யுத்த போட்டிக்கு, வெளிநாட்டு வீரர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை.
பெலகாவி மாவட்டம், கித்துார் ராணி சென்னம்மா திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படும். இந்த உத்சவத்தில் இளைஞர் அதிகாரமளித்தல் மற்றும் விளையாட்டு துறை சார்பில் மல்யுத்தம், வாலிபால், கபடி உட்பட பிற விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன.
கடந்த 2023ல் நடந்த மல்யுத்த போட்டியில், ஈரானிய நாட்டை சேர்ந்த வீரர்கள் ரிசா மற்றும் அகமது மிர்சா பங்கேற்றனர். கடந்தாண்டும் ஈரானி வீரர் இர்பான் ஹுசைன்சாத் அலி பங்கேற்றார். மல்யுத்த போட்டியை காண, மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் கிராம மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பர்.
நடப்பாண்டு நாளை நடக்கும் மல்யுத்த போட்டியில் வெளிநாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் மல்யுத்த வீரர்கள், பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மல்யுத்த போட்டியில் பங்கேற்க வெளிநாட்டு வீரர்களை அழைத்து வந்தால், ஒருவருக்கு 3 லட்சம் ரூபாய் செலவிட வேண்டும். போட்டிகளை நடத்த, மாநில அரசு நடப்பாண்டு 15 லட்சம் ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கி உள்ளது. இதனால் வெளிநாட்டு வீரர்களை அழைக்கவில்லை. அரசு ஒதுக்கிய நிதியில், மற்ற போட்டிகள் நடத்தப்படும்' என்றனர்.

