/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எடியூரப்பா தற்கொலை மிரட்டல் எத்னால் பரபரப்பு குற்றச்சாட்டு
/
எடியூரப்பா தற்கொலை மிரட்டல் எத்னால் பரபரப்பு குற்றச்சாட்டு
எடியூரப்பா தற்கொலை மிரட்டல் எத்னால் பரபரப்பு குற்றச்சாட்டு
எடியூரப்பா தற்கொலை மிரட்டல் எத்னால் பரபரப்பு குற்றச்சாட்டு
ADDED : ஏப் 04, 2025 06:55 AM

பெங்களூரு: ''என்னை கட்சியில் இருந்து நீக்காவிட்டால், துாக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதாக பா.ஜ., மேலிடத்தை மிரட்டி, எடியூரப்பா என்னை கட்சியில் இருந்து நீக்க வைத்தார்,'' என, பசனகவுடா பாட்டீல் எத்னால் குற்றம் சாட்டினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
எடியூரப்பா கீழ்த்தரமான அரசியல் செய்து, இறுதி நாட்களை எண்ணுகிறார். தான் இறக்கும் முன் விஜயேந்திராவை முதல்வராக்க வேண்டும் என்பது, அவரது ஆசையாகும். எனவே தன் மகனை பாதுகாக்கிறார். உலகம் முழுதும் சொத்து சம்பாதிக்க, இருவரும் போராடுகின்றனர்.
விவசாயிகள், ஏழைகளுக்கு ஆதரவான போராட்டத்தில், எடியூரப்பா பங்கேற்கவில்லை. தன் மகனின் நாற்காலியை பலப்படுத்த, போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். தன் மகனை பதவியில் இருந்து நீக்க முற்பட்டால், எத்னாலை கட்சியை விட்டு நீக்காவிட்டால், துாக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதாக, எடியூரப்பா மேலிடத்தை மிரட்டி, என்னை கட்சியில் இருந்து நீக்க வைத்தார்.
நான் புதிய கட்சியை துவங்குவதாக, கூறியது யார். நாங்கள் முதலில் சர்வே நடத்துவோம். பா.ஜ.,வில் எடியூரப்பா குடும்பம் நீடித்தால், புதிய கட்சி துவங்குவது குறித்து ஆலோசிப்போம். இவரது குடும்பத்தை நீக்கினால் மட்டுமே, கர்நாடகாவில் பா.ஜ.,வுக்கு எதிர்காலம் இருக்கும்.
இவர்கள் மீது கொரோனா ஊழல், நில மறு அறிவிப்பு ஊழல் உள்ளது. சித்தராமையா அரசை பற்றி பேச, இவர்களுக்கு என்ன அருகதை உள்ளது. விஜயேந்திராவின் கைத்தடிகள், சித்தராமையாவை ராஜினாமா செய்யுமாறு கூறுகின்றனர். இவர்கள் சிவகுமார் போட்ட பிச்சையால் எம்.எல்.ஏ., ஆனவர்கள். முதலில் விஜயேந்திரா ராஜினாமா செய்யட்டும்.
விஜயேந்திராவுக்கு தைரியம் இருந்தால், என் முன்னால் நின்று பேசட்டும். நான்கு கைத்தடிகளை உடன் வைத்து கொண்டு பேசக்கூடாது. வக்ப் திருத்த மசோதாவை கொண்டு வந்த பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

