/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
17 வயது சிறுமி பலாத்காரம் யோகா ஆசிரியர் கைது
/
17 வயது சிறுமி பலாத்காரம் யோகா ஆசிரியர் கைது
ADDED : செப் 18, 2025 11:12 PM

ஆர்.ஆர்.நகர்: தேசிய அளவில் யோகா போட்டியில் பங்கேற்க வைப்பதாக, 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த, யோகா மைய உரிமையாளர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் வசிப்பவர் நிரஞ்சன் மூர்த்தி. யோகா ஆசிரியரான இவர், 'சன்ஷைன் இன்ஸ்டிடியூட்' என்ற பெயரில், யோகா மையம் நடத்துகிறார். இங்கு, 17 வயது சிறுமி பயிற்சி பெற்றார். கடந்த மாதம் ஒரு நாள் யோகா மையத்தில் சிறுமியும், நிரஞ்சன் மூர்த்தியும் தனியாக இருந்தனர்.
சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்த நிரஞ்சன் மூர்த்தி, 'தேசிய அளவில் நடக்கும் யோகா போட்டியில், உன்னை பங்கேற்க வைக்கிறேன்' என்று, ஆசை வார்த்தை கூறி சிறுமியை பலாத்காரம் செய்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, சிறுமியை மீண்டும் பலாத்காரம் செய்ய முயன்றார்.
மனம் உடைந்த சிறுமி, தனது பெற்றோரிடம் கூறினார். கடந்த 14ம் தேதி நிரஞ்சன் மூர்த்தி மீது, ஆர்.ஆர்.நகர் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த அவரை தேடினர். நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து மேற்கு மண்டல டி.ஜி.பி., கிரிஷ் நேற்று கூறியதாவது:
யோகா ஆசிரியர் நிரஞ்சன் மூர்த்திக்கும், பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமிக்கும் கடந்த 2019 முதல் அறிமுகம் இருந்து உள்ளது.
கடந்த 2021 முதல் யோகா போட்டிக்கு சிறுமி தயாராகி வந்தார். 2023ல் சிறுமியை, யோகா போட்டிக்காக தாய்லாந்து அழைத்து சென்ற நிரஞ்சன் மூர்த்தி அங்கு, பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். பின், அந்த சிறுமி, யோகா மையத்திற்கு செல்வதை நிறுத்தி விட்டார்.
கடந்த ஆண்டு மீண்டும் யோகா மையத்தில் சேர்ந்து உள்ளார். தேசிய அளவில் நடக்கும் யோகா போட்டியில் பங்கேற்க வைப்பதாக கூறி, சிறுமியை பலாத்காரம் செய்து உள்ளார்.
யோகா மையத்தில் பயிற்சிக்கு வந்த சிறுமியர், பெண்கள் என மேலும் எட்டு பேரை, நிரஞ்சன் மூர்த்தி பலாத்காரம் செய்து இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது.
அவரால் பாதிக்கப்பட்டவர்கள், ஆர்.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யலாம். பாதிக்கப்பட்டோர் தகவல் ரகசியமாக வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.