ADDED : மே 09, 2026 11:55 PM

பீதர்: வீட்டுக்குள் படுத்திருந்த ஐந்து மாத பெண் குழந்தையை, தெருநாய் கடித்து கொன்றது, கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுகாவின், துபலகுந்தி கிராமத்தில் வசிப்பவர் சித்தப்பா. இவரது மனைவி சுதா. தம்பதிக்கு ஷிவானி என்ற ஐந்து மாத பெண் குழந்தை இருந்தது.
நேற்று காலை, வெளிக்கதவை திறந்து வைத்துவிட்டு, குழந்தையை வீட்டின் முற்றத்தில் படுக்க வைத்து விட்டு, சுதா வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது தெருநாய், வீட்டுக்குள் புகுந்து குழந்தையை கடித்தது; வலியால் குழந்தை கதறியது.
இதை கேட்ட, சுதா ஓடி வந்து பார்த்தார். குழந்தையை நாய் கடிப்பதை கண்டு, நாயை விரட்டினார். நாய் கடித்ததில் குழந்தையின் முகம், தலை உட்பட, பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
பெற்றோர் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.
இந்த சம்பவம் கிராமத் தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிராமத்தில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக அலைகின்றன. இவற்றை கட்டுப்படுத்த உள்ளாட்சி அதிகாரிகள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதன் விளைவாக பச்சிளம் குழந்தை, நாய்க்கு பலியானது என, கிராமத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இனியாவது நாய்களை கட்டுப்படுத்த வேண்டும். இறந்த குழந்தையின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என, வலியுறுத்தினர்.
