ADDED : டிச 09, 2025 06:24 AM
கொப்பால்: அடுத்த இரண்டு வாரங்களில், மணமேடை ஏறவிருந்த ஜோடி, சாலை விபத்தில் பலியாகினர்.
கொப்பால் மாவட்டம், காரடகி தாலுகாவின், முஷ்டூரு கிராமத்தில் வசித்தவர் கவிதா பவாடெப்பா மடிவாளா, 19, இவருக்கும், இரகல்கடகா கிராமத்தை சேர்ந்த கரியப்பா மடிவாளா, 26, என்பவருக்கும், இரண்டு குடும்பத்தினரின் சம்மதத்தின்படி திருமணம் நிச்சயமாகி இருந்தது. இம்மாதம் 21ம் தேதி, திருமணம் நடக்கவிருந்தது.
சமீப நாட்களாக திருமணத்துக்கு முன், ஜோடியாக போட்டோ ஷூட் நடத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அதன்படி கவிதாவும், கரியப்பாவும் நேற்று முன்தினம், விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட் அருகில் உள்ள முனிராபாத்துக்கு சென்றனர்.
பல்வேறு சுற்றுலா தலங்களில் போட்டோ, வீடியோ ஷூட் நடத்தினர். போட்டோ ஷூட் முடிந்த பின், இரவு பைக்கில் முஷ்டூர் கிராமத்துக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
கங்காவதியின், தாசனாளா அருகில் பன்ட்ராளா - வெங்கடகிரி கிராஸ் அருகில் செல்லும் போது, பைக் மீது லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த கரியப்பா, கவிதா உயிரிழந்தனர். கங்காவதி ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

