ADDED : ஏப் 11, 2025 11:14 PM

பெங்களூரு:பெங்களூரில் மெட்ரோ ரயில் நிலையத்தில், இளம்ஜோடி அநாகரிகமாக நடந்து கொண்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.
டில்லி மெட்ரோ ரயிலில் தான் இளம்ஜோடிகள் அத்துமீறி நடப்பது; மதுபானம் குடிப்பது; ஹோலி கொண்டாடுவது போன்ற நிகழ்வுகள் நடந்து உள்ளன. தற்போது, பெங்களூரிலும் டில்லி கலாசாரம் மெல்ல பரவ ஆரம்பித்து உள்ளது.
பெங்களூரின் மாதவாரா மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு இளம் ஜோடி ரயிலுக்காக காத்து நின்றனர். திடீரென அந்த இளம்பெண் அருகே நெருங்கி சென்ற வாலிபர், பெண் உடலில் கையை வைத்து அநாகரிகமாக நடந்து கொண்டார். இத்தனைக்கும், பக்கத்தில் ஏராளமான பயணியர் நின்று கொண்டு இருந்தனர்.
இதை எல்லாம் அந்த வாலிபர் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. வாலிபரின் செயலுக்கு இளம்பெண்ணும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார்.
அந்த வீடியோ வேகமாக பரவியது. வீடியோவை பார்க்கும் நெட்டின்சன்கள், 'டில்லி கலாசாரத்தை நோக்கி, பெங்களூரு மெட்ரோ கலாசாரமும் செல்கிறதா' என்று கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், 'அந்த ஜோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் கூறி உள்ளனர்.
