/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிறு தானியங்கள் பயிரிடுவதில் ஆர்வம்' இளம் தலைமுறை விவசாயிகள் உற்சாகம்
/
சிறு தானியங்கள் பயிரிடுவதில் ஆர்வம்' இளம் தலைமுறை விவசாயிகள் உற்சாகம்
சிறு தானியங்கள் பயிரிடுவதில் ஆர்வம்' இளம் தலைமுறை விவசாயிகள் உற்சாகம்
சிறு தானியங்கள் பயிரிடுவதில் ஆர்வம்' இளம் தலைமுறை விவசாயிகள் உற்சாகம்
ADDED : அக் 20, 2025 07:02 AM

விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பாக போற்றப்படுகின்றனர். மக்களின் உணவுக்கு தேவையான தானியங்களை பயிரிடுகின்றனர். ஆனால், அவர்களுக்கு உழைப்புக்கேற்ற லாபம் கிடைப்பதில்லை. இன்றைய இளம் தலைமுறை விவசாயிகள், தொழிலதிபர்களுக்கு சிறிதும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கின்றனர்.
விவசாயத்தில் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். சிறு தானியங்கள் பயிரிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். சிறு தானியங்கள், பல விவசாயிகளை தொழிலதிபர்களாக மாற்றியுள்ளன. தாவணகெரே, சித்ரதுர்காவில் சிறு தானியங்கள் பயிரிடும் விவசாயிகள் எண்ணிக்கை அதிகம். ஆனால், இது அவர்களுக்கு அவ்வளவாக லாபம் அளிக்கவில்லை.
சங்க உறுப்பினர்கள் இப்போது வருவாய்த் துறை அமைச்சரான கிருஷ்ண பைரேகவுடா, 2016ல் விவசாயத்துறை அமைச்சராக இருந்தார். இவர் சிறுதானியங்கள் பயிரிடுவது குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தாவணகெரே, சித்ரதுர்கா விவசாயிகள் கூட்டுறவு சங்கம் உருவாக காரணமாக இருந்தார்.
அரசு சாரா தொண்டு நிறுவனத்தில் பணியாற்றியபடி, விவசாயத்திலும் ஈடுபட்ட கிருபா, இந்த கூட்டுறவு சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றார். தன் கடும் முயற்சியால், 3,000 விவசாயிகளை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக்கினார்.
இரண்டு மாவட்டங்களின் 3,000 விவசாயிகள், 10,000 ஏக்கர் நிலத்தில், 9,000 டன்னுக்கும் மேற்பட்ட சிறுதானியங்கள் பயிரிட்டு, விற்பனை செய்கின்றனர். சிறுதானியங்களை பயிரிடுவதுடன், 2022ல் சொந்தமாக தொழில் நிறுவனம் துவக்கினர். இதற்காக அரசின் 15 லட்சம் ரூபாய் மானியமும், 33 லட்சம் ரூபாய் கடன் உதவியும் கிடைத்தது. இது, விவசாயிகள் கூட்டுறவு சங்கத்துக்கு உதவியாக இருந்தது.
'சீமி' பிராண்ட் தற்போது பல்வேறு சிறுதானியங்களை பயிரிடுவதுடன், சிறுதானிய நுாடுல்ஸ், இட்லி, தோசை மாவு, சிறார்களுக்கான தின்பண்டங்கள் உட்பட 120 விதமான சிறுதானிய உணவு பொருட்களை தயாரித்து விற்கின்றனர். 'சீமி' என்ற பிராண்ட் பெயரில், பொருட்களை மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளனர். இவற்றுக்கு மார்க்கெட்டில் நல்ல மவுசு உள்ளது. இதற்கு முன், ஆண்டுதோறும் 15 முதல் 18 கோடி ரூபாய் வரையிலான வர்த்தகம் நடந்தது. இப்போது 25 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பிளிப்கார்ட், அமேசான் ஆன்லைன் மார்க்கெட்களிலும், சீமி உற்பத்தி பொருட்கள் கிடைக்கின்றன. விவசாயிகள் கூட்டுறவு சங்கம், மற்ற விவசாயிகளிடம் இருந்தும் சிறுதானியங்களை கொள்முதல் செய்து, உற்பத்திகளுக்கு பயன்படுத்துகின்றனர். கூட்டுறவு சங்கத்தின் உற்பத்தி பொருட்கள், வேறு ஏற்றுமதி நிறுவனம் மூலமாக, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அடுத்த இரண்டு ஆண்டுகளில், யாருடைய உதவியும் இல்லாமல், சீமி உற்பத்தி பொருட்களை நேரடியாக ஏற்றுமதி செய்ய திட்டம் வகுத்துள்ளனர். விவசாயிகளான இவர்கள், தொழிலதிபர்களாக வளர்ந்துள்ளனர்.
- நமது நிருபர் -