சாம்பார் வைக்காத இளம்பெண்: தந்தை திட்டியதால் தற்கொலை
சாம்பார் வைக்காத இளம்பெண்: தந்தை திட்டியதால் தற்கொலை
ADDED : ஏப் 26, 2026 11:48 PM

சிக்கமகளூரு: சாம்பார் வைக்கவில்லை என, தந்தை கடுமையாக திட்டிய காரணத்தால், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சிக்கமகளூரு மாவட்டம், மூடிகெரே தாலுகாவின், தேவவிருந்தா கிராமத்தில் வசிப்பவர் நடேஷ் பூஜாரி. இவரது மகள் சவுஜன்யா, 22. நேற்று முன்தினம் காலை காய்கறிகள் வாங்கி வந்த நடேஷ், சாம்பார் வைக்கும்படி கூறிவிட்டு, பணி நிமித்தமாக வெளியே சென்றார்.
ஆனால் சவுஜன்யா, சாம்பார் வைக்கவில்லை. மதிய உணவுக்காக, 2:30 மணியளவில் வீட்டுக்கு வந்த நடேஷ், இதற்காக மகளை கடுமையான வார்த்தைகளால் திட்டினார். அதன்பின் சாம்பார் வாங்கி வர, பக்கத்து வீட்டுக்கு சென்றார்.
தந்தை திட்டியதால் மனம் வருந்திய சவுஜன்யா, அறைக்குள் சென்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்துக்கு பின், வீட்டுக்கு வந்த நடேஷ், மகள் தற்கொலை செய்து கொண்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
கோனிபீடு போலீசார் விசாரிக்கின்றனர்.
