ADDED : ஏப் 20, 2026 02:15 AM
பரப்பன அக்ரஹாரா: வாடிக்கையாளர் போல் சென்று, நகைக்கடையில் மோதிரம் திருடிய இளம்பெண் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா பகுதியில் உள்ள, நகைக்கடைக்கு கடந்த 12ம் தேதி இளம்பெண் ஒருவர் சென்றார். மோதிரம் வாங்க வந்திருப்பதாக கூறினார். நகை கடை ஊழியர், இளம்பெண்ணிடம் மோதிரங்களை காண்பித்தார்.
வேறு டிசைன்களில் மோதிரங்களை காட்டும்படி கூறியதால், ஊழியர் திரும்பி நின்று மோதிரங்களை எடுத்து கொண்டு இருந்தார்.
இதனை பயன்படுத்தி கொண்ட இளம்பெண், இரண்டு மோதிரங்களை எடுத்து கை விரல்களில் மாட்டி கொண்டார். சிறிது நேரம் கழித்து தனக்கு எந்த மோதிரமும் பிடிக்கவில்லை. இன்னொரு நாள் வருகிறேன் என்று கூறி விட்டு புறப்பட்டு சென்றார்.
அந்த இளம்பெண் சென்றதும், மோதிரங்களை சரிபார்த்த போது, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு மோதிரங்களை திருடியது தெரிந்தது.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, இளம்பெண் தனது விரலில் மோதிரங்களை மாட்டியது தெளிவாக பதிவாகி இருந்தது.
கடை உரிமையாளர் ஆகாஷ் அளித்த புகாரில் பரப்பன அக்ரஹாரா போலீசார் விசாரித்தனர். பெண்கள் தங்கும் விடுதியில் வசித்த இளம்பெண்ணை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
விசாரணையில் அவரது பெயர் அகன்ஷா, 24 என்று தெரிந்தது. திருடிய மோதிரங்களை விற்றது தெரியவந்தது. மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
இதுபோன்று வேறு ஏதாவது நகைக்கடையில் திருடினாரா என்றும் விசாரணை நடக்கிறது.
