/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடக மதர்ஸ் கிச்சனில் 'உங்கள் வீட்டு சமையல்'
/
கர்நாடக மதர்ஸ் கிச்சனில் 'உங்கள் வீட்டு சமையல்'
ADDED : ஜன 05, 2026 06:20 AM

- நமது நிருபர் -:
தாய் தன் குழந்தைகளுக்கு பாசத்தை கொட்டி செய்து தரும் உணவு, அமுதத்துக்கு ஈடானது. அதுவே, பல அம்மாக்கள் இணைந்து, உங்களுக்கு கர்நாடக பாரம்பரிய உணவு வகைகளை செய்து கொடுத்தால்...
ஆம், பெங்களூரு - பல்லாரி சாலையில், மேக்ரி சதுக்கம் தாண்டியவுடன் சஞ்சய்நகர் என்ற இடம் வரும். அங்கு, 'சயின்ஸ் கேலரி பெங்களூரு' அமைந்து உள்ளது. இங்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வருகின்றனர்.
வெளி கிரகம் இங்குள்ள அறிவியலை பார்த்து ரசித்த பின், அதே ரசனையில் அறிவியல் மையத்தில் உள்ள, 'ஹென்சு லைப்' எனும் உணவகத்துக்கு சென்றால், கர்நாடகாவில் பாரம்பரிய உணவுகளை 'ஒரு கை பார்க்கலாம்'. வெளியே இருந்து இந்த உணவகத்தை பார்க்கும் போது, வெளி கிரகத்தில் இருந்து வந்த, 'சில்வர்' பறக்கும் 'கேப்சூல்' போன்று காணப்படுகிறது.
இங்கு காயத்ரி மிருதுஞ்செயா, 63,வுடன் மேலும் சில பெண்கள் இணைந்து உணவுகளை தயாரித்து வருகின்றனர். கர்நாடக பாரம்பரிய உணவுகளுடன், இங்கேயே கேக், பன் மற்றும் குறிப்பிட்ட வட மாநில உணவுகளை தயாரிக்கின்றனர்.
பெரிய பெரிய ஹோட்டல்கள் போன்று சுவருக்கு பின்னால் உணவு தயாரிக்காமல், வாடிக்கையாளர்கள் பார்க்கும் வகையில், சமையல் பகுதி அமைந்து உள்ளது. இதன் மூலம் இவர்களை, சமையல் வாடிக்கையாளர்கள் நேரடியாக காணலாம்.
இதுகுறித்து காயத்ரி கூறியதாவது:
கடந்த, 35 ஆண்டுகளாக என் குடும்பத்துக்காக ஒவ்வொரு உணவையும் பார்த்து பார்த்து சமைத்து கொடுத்து வந்தேன். அவர்களும், என் உணவை சாப்பிட்ட பின், இதற்கு ஈடு இணையே இல்லை என்பர். பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனபின், ஒரு நாள், 'சமையலில் ராணியான நீங்கள் ஏன், இதையே தொழிலாக செய்யக்கூடாது' என்று கேட்டனர்.
மகன் உறுதுணை அப்போது, 'ஹென்சு' திட்டம் என் மனதில் உதித்தது. உடனடியாக களத்தில் இறங்கி, இங்கு ஹோட்டலை துவக்கினேன். இதற்கு என் மகன் கார்த்திக் உறுதுணையாக இருக்கிறார். நான் மட்டும் ஈடுபடாமல், என்னை போன்ற பெண்களையும் என்னுடன் இணைத்து கொண்டேன்.
ஒரு முறை சயின்ஸ் கேலரி பெங்களூருக்கு வந்த பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார், எங்களிடம் உணவு வாங்கி சாப்பிட்டார். அவரின் சமூக வலைதளத்தில் எங்களின் உணவு ருசி குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
இது, எங்களுக்கு பெருமை அளித்தது. அத்துடன், இங்கு வரும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து உள்ளனர். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களிடம் உணவின் விலை, 20 ரூபாயில் இருந்து துவங்குகிறது.
இவ்வாறு அவர் மன நிறைவுடன் கூறினார்.
காயத்ரியின் மகன் கார்த்திக். இவர் சிவில் இன்ஜினியர். அவர் கூறுகையில், ''என் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற நான்கு மாதங்களுக்கு முன் ேஹாட்டல் துவங்கினோம். 12 பேர் வேலை செய்கின்றனர். அதில், ஒன்பது பேர் பெண்கள். தென் மாநில, வட மாநில உணவுகளை ஒரு கை பார்க்கலாம். தினமும் காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை ஹோட்டல் திறந்திருக்கும். காலை சிற்றுண்டி, மதியம் உணவு, தின்பண்டங்கள் கிடைக்கின்றன,'' என்றார்.
இங்கு நேரடியாக தான் சென்று சாப்பிட வேண்டும்; பார்சல் கிடையாது. வாரம் தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் விடுமுறை. தொடர்புக்கு: 98445 73083.

