/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தாய்ப்பால் தானம் செய்யும் இளம் தாய்மார்கள்
/
தாய்ப்பால் தானம் செய்யும் இளம் தாய்மார்கள்
ADDED : ஜன 05, 2026 06:16 AM
- நமது நிருபர் -
மைசூரின் செலுவாம்பா மருத்துவமனையில், தொண்டு அமைப்பின் ஒத்துழைப்புடன், 'அம்ருத வர்ஷிணி' என்ற தாய்ப்பால் வங்கி துவக்கப்பட்டுள்ளது. இதற்கு இளம் தாய்மார்கள் ஆதரவளித்துள்ளனர்.
பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் இன்றியமையாதது. அது, குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறை பிரசவத்தில் குழந்தை பெற்ற பெண்ணுக்கு தாய்ப்பால் சுரக்காவிட்டால் அல்லது தாய் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்காது. இதுபோன்ற குழந்தைகளின் நலனுக்காக, தனியார் மருத்துவமனைகள் மற்றும் சில அரசு மருத்துவமனைகளில், தாய்ப்பால் வங்கி துவக்கப்பட்டுள்ளது.
மைசூரில் உள்ள செலுவாம்பா மருத்துவமனை, நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கு, சிறப்பான மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறது. இந்த மருத்துவமனையில், சில நாட்களுக்கு முன் தாய்ப்பால் வங்கி திறக்கப்பட்டுள்ளது.
தொண்டு அமைப்புகளின் உதவியுடன் திறக்கப்பட்ட, 'அம்ருத வர்ஷிணி' என்ற தாய்ப்பால் வங்கிக்கு, இளம் தாய்மார்களிடம் ஆதரவு கிடைத்துள்ளது. அவர்கள் தாமாக முன் வந்து தாய்ப்பால் தானம் செய்கின்றனர். இது, பச்சிளம் குழந்தைகளுக்கு, மிகவும் உதவியாக உள்ளது.
செலுவாம்பா மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:
'அம்ருத வர்ஷிணி' தாய்ப்பால் வங்கி மூலம் ஆரோக்கியமான தாய்மார்களிடம் தாய்ப்பால் சேகரித்து, பதப்படுத்தி வைத்து, தேவையான குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. குழந்தைக்கு தாய்ப்பால் புகட்ட முடியாத நிலையில் தாய் இருந்தால், நோயில் பாதிக்கப்பட்டிருந்தால், குழந்தைகள் தாய்ப்பால் இல்லாமல் அவதிப்படும்.
இத்தகைய குழந்தைகளின் நலனுக்காக, இந்த வங்கி திறக்கப்பட்டுள்ளது.
மனித நேயம் கொண்ட, பச்சிளம் குழந்தைகள் வைத்துள்ள தாய்கள், இந்த வங்கியில் தாய்ப்பால் தானம் செய்கின்றனர். இதேபோன்று, மைசூரு மஹாராஜாவால் கட்டப்பட்ட கே.ஆர்.மருத்துவமனையிலும் தாய்ப்பால் வங்கி திறக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

