/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இளம்பெண்ணுக்கு பாலியல் சீண்டல் 10 நாளுக்கு பின் வாலிபர் கைது
/
இளம்பெண்ணுக்கு பாலியல் சீண்டல் 10 நாளுக்கு பின் வாலிபர் கைது
இளம்பெண்ணுக்கு பாலியல் சீண்டல் 10 நாளுக்கு பின் வாலிபர் கைது
இளம்பெண்ணுக்கு பாலியல் சீண்டல் 10 நாளுக்கு பின் வாலிபர் கைது
ADDED : ஏப் 15, 2025 07:01 AM

சுத்தகுன்டேபாளையா: பெங்களூரில் இளம் பெண்ணை கட்டி அணைத்து, பாலியல் சீண்டல் செய்து விட்டு, தப்பி ஓடிய வாலிபர், கேரளாவில் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரின் சுத்தகுன்டேபாளையாவின் பாரதி லே - அவுட்டில், ஏப்ரல் 3ம் தேதி அதிகாலை 1:30 மணி அளவில், இரு இளம் பெண்கள் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
சீண்டல்
அப்போது அவர்களை பின் தொடர்ந்து சென்ற வாலிபர் ஒருவர், ஒரு பெண்ணை கட்டி அணைத்து, பாலியல் சீண்டல் செய்து விட்டு தப்பி ஓடினார். கண்காணிப்பு கேமராவில் பதிவான இக்காட்சி, சமூக வலைதளங்களில் பரவியது.
பாதிக்கப்பட்ட அப்பெண் புகார் அளிக்கவில்லை என்றாலும், அப்பகுதியை சேர்ந்தவர்கள் சுத்தகுன்டேபாளையா போலீசில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணையை துவக்கினர். சம்பவம் நடந்த பகுதி உட்பட பல்வேறு இடங்களில் 700 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இது தொடர்பாக பெங்களூரு தென்கிழக்கு டி.சி.பி., சாரா பாத்திமா நேற்று அளித்த பேட்டி:
புகார்
இச்சம்பவத்தில், வாலிபரால் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கவில்லை. அப்பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினோம்.
கேமராவில் பதிவான பெண்ணை கண்டுபிடித்து விசாரித்தோம். பின், மடிவாளா, சுத்தகுன்டேபாளையா பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தோம்.
சம்பவ தினத்தில் அவர் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தின் நம்பரை கொண்டு, அவர் யார் என்பதை தெரிந்து கொண்டோம். அவரின் வீட்டுக்கு சென்று குடும்பத்தினரிடம் விசாரித்த போது, அவர் வீட்டுக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.
நாங்கள், விசாரிப்பதை உணர்ந்த அந்நபர், தலைமறைவாகி விட்டார். போலீசார் பல வகையில் விசாரித்த போது, கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அவரின் உறவினர் வீட்டில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார், அவரை கைது செய்து, பெங்களூரு அழைத்து வந்தனர்.
விசாரணையில், இளம் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதை ஒப்புக் கொண்டார். அவர் பெங்களூரு திலக் நகரில் உள்ள குல்பர்கா காலனியில் வசித்து வரும் சந்தோஷ் டேனியல், 26 என்பது தெரிந்தது. இவருக்கு தந்தை இல்லை; தாய், தம்பியுடன் வசித்து வருகிறார். ஒயிட்பீல்டில் உள்ள கார் ஷோரூம் ஒன்றில் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவரிடம் மேலும் விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.