கல்லுாரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது
கல்லுாரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது
ADDED : ஜூன் 04, 2026 11:05 PM

ஒயிட்பீல்டு: அதிகாலையில் சாலையில் தனியாக நடந்து சென்ற, கல்லுாரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற, வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள பி.ஜி., எனும் தங்கும் விடுதியில், 21 வயது கல்லுாரி மாணவி தங்கி உள்ளார். கடந்த 2ம் தேதி அதிகாலை, 4:30 மணிக்கு பி.ஜி.,யில் இருந்து வெளியே வந்த மாணவி, தனியாக நடந்து, தேநீர் கடைக்கு சென்றார். டீ குடித்துவிட்டு மீண்டும் பி.ஜி.,க்கு நடந்து சென்றார்.
இந்த நேரத்தில் அங்கு வந்த வாலிபர் ஒருவர், மாணவியின் கையை பிடித்து இழுத்தார். மாணவியை வலுக்கட்டாயமாக தனது தோளில் துாக்கி போட்டார். அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சல் போட்டார். அக்கம்பக்கத்தில் இருந்த வீடுகளில் இருந்து மக்கள் வந்ததால், அந்த வாலிபர், மாணவியை கீழே விட்டு தப்பி சென்றார்.
தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாக, வாலிபர் மீது மாணவி புகார் செய்தார். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அந்த காட்சிகள் அடிப்படையில், மேற்கு வங்க மாநிலத்தின் சைபுல் மொண்டல், 27, என்பவரை, ஒயிட் பீல்டு போலீசார் நேற்று கைது செய்தனர்.
இவர், பல ஆண்டுகளாக குப்பைகளை சேகரித்து விற்பனை செய்யும் தொழில் செய்தது, போலீஸ் விசாரணையில் தெரிந்தது.
