/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆன்லைனில் கார் விற்பதாக கூறி மோசடி செய்த வாலிபர் கைது
/
ஆன்லைனில் கார் விற்பதாக கூறி மோசடி செய்த வாலிபர் கைது
ஆன்லைனில் கார் விற்பதாக கூறி மோசடி செய்த வாலிபர் கைது
ஆன்லைனில் கார் விற்பதாக கூறி மோசடி செய்த வாலிபர் கைது
ADDED : ஜூலை 01, 2025 03:38 AM

மங்களூரு: ஆன்லைனில் கார் விற்பனை செய்வதாக கூறி, கடந்த மூன்று ஆண்டுகளாக பண மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மங்களூரு நகரில் உள்ள சைபர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில், சில மாதங்களுக்கு முன், உத்தர கன்னடாவை சேர்ந்த ரவிச்சந்திர மஞ்சுநாத் ரேவன்னகர், 29, என்பவர் மீது, பண மோசடி புகார் அளிக்கப்பட்டது. புகாரில், 'மஞ்சுநாத், ஓ.எல்.எக்ஸ்., செயலியில் கார் விற்பனை செய்வதாகக் கூறி 2.50 லட்சம் ரூபாயை பெற்று, காரை வழங்கவில்லை' என கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து, போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர், விஜயநகரா மாவட்டம் ஹொஸ்பேட்டில் இருப்பது தெரிந்தது. அங்கு சென்ற போலீசார், அவரை கைது செய்தனர். மங்களூரு அழைத்து வந்தனர்.
விசாரணையில், மஞ்சுநாத் கடந்த மூன்று ஆண்டுகளாக ஓ.எல்.எக்ஸ்., செயலியில் கார்களை விற்பனை செய்வதாக கூறி பலரிடம் பண மோசடி செய்தது தெரியவந்தது. 21 வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார். எட்டு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார். இதன் மூலம், 80க்கும் மேற்பட்ட சைபர் மோசடிகள் செய்ததாக புகார்கள் உள்ளன.
ஒருவரை ஏமாற்றி பணம் பெற்ற பின், சிம் கார்டை மாற்றும் வழக்கத்தை வைத்துள்ளார். அவரால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது என்று மங்களூரு சைபர் போலீசார் நேற்று தெரிவித்தனர். மேலும், இணையதளங்கள் மூலம் கார்கள் வாங்கும்போது, மக்கள், ஜாக்கிரதையாக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.