தோட்டாக்கள் நிரப்பிய கைத்துப்பாக்கியை ஹோட்டலில் விட்டு சென்ற வாலிபர் கைது
தோட்டாக்கள் நிரப்பிய கைத்துப்பாக்கியை ஹோட்டலில் விட்டு சென்ற வாலிபர் கைது
ADDED : மே 19, 2026 11:33 PM

ஜே.சி.நகர்: தோட்டாக்கள் நிரப்பிய கைத்துப்பாக்கியை, ஹோட்டலில் விட்டு சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார். அந்த துப்பாக்கி அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது என்பதால், அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.
பெங்களூரு ஜே.சி., நகர் ஜெயமஹால் பேலஸ் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு, கடந்த மாதம், 27ம் தேதி வாலிபரும், இளம்பெண்ணும் வந்தனர்.
அந்த வாலிபர் தன் பெயரை அர்மான் முத்தஹார், 34, என்று கூறியதுடன், அமெரிக்காவில் வசிக்கும் குடியுரிமை சான்றிதழை காட்டி, அறை முன்பதிவு செய்தார்.
வாலிபரும், இளம்பெண்ணும் ஒரு அறையில் தங்கினர். மறுநாள் காலை அறையை காலி செய்து விட்டு சென்றனர்.
ஹோட்டல் ஊழியர்கள் அறையை சுத்தம் செய்ய சென்ற போது, தோட்டாக்கள் நிரப்பி இருந்த கைத்துப்பாக்கியை எடுத்தனர். அதை, ஹோட்டல் மேலாளரிடம் கொடுத்தார்.
அர்மானுக்கு போன் செய்த ஹோட்டல் மேலாளர், துப்பாக்கியை விட்டு சென்றது பற்றி கூறினார்.
'அந்த துப்பாக்கியை பயன்படுத்த என்னிடம் உரிமம் உள்ளது. மறந்து விட்டு சென்று விட்டேன். விரைவில் வந்து வாங்கி கொள்கிறேன்' என்று, அர்மான் கூறி உள்ளார்.
ஆனால், அவர் பல நாட்கள் ஆகியும் வராததால், துப்பாக்கியை, ஜே.சி., நகர் போலீஸ் நிலையத்தில், ஹோட்டல் நிர்வாகம் ஒப்படைத்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஜே.சி., நகர் போலீஸ் நிலையம் சென்ற அர்மான், துப்பாக்கியை கேட்டு உள்ளார்.
ஆனால் அவரிடம் துப்பாக்கியை பயன்படுத்த போதுமான உரிமம் இல்லாததால், அவரை போலீசார் கைது செய்தனர்.
அந்த துப்பாக்கி, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது என்பதும் தெரிந்தது. அங்கிருந்து இங்கு எப்படி கொண்டு வந்தார் என, போலீசாருக்கு சந்தேகம் எழுந்து உள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.
