ADDED : மே 30, 2025 06:30 AM

காடுகோடி: சாலையில் நடந்து சென்ற சிறுமிக்கு நடனம் பற்றி தகவல்கள் தெரிவிப்பதாக கூறி, காரில் ஏற்றிக் கொண்டு, பாலியல் தொல்லை கொடுத்த நடன ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு காடுகோடி பகுதியில் இம்மாதம் 24ம் தேதி சாலை ஓரத்தில் 17 வயதுக்கு உட்பட்ட சிறுமி, நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் அருகில் கார் நின்றது. காரில் இருந்த நபர், தன்னை நடன ஆசிரியர் என்று அறிமுகம் செய்து கொண்டார். தன் காரில் அமர்ந்தால், நடனம் குறித்து தெரிவிக்கிறேன் என்று கூறி, வலுக்கட்டாயமாக காரில் ஏறி உள்ளார். பின், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு, அங்கேயே இறக்கி விட்டு சென்று விட்டார்.
வீட்டுக்கு சென்ற சிறுமி, நடந்த விபரங்களை பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்களும், காடுகோடி போலீசில் புகார் செய்தனர். போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டனர். காரை அடையாளம் கண்ட போலீசார், பாரதி கண்ணன், 28, என்பவரை கைது செய்தனர்.