கப்பன் பூங்காவில் மரத்தில் துாக்கிட்டு வாலிபர் தற்கொலை
கப்பன் பூங்காவில் மரத்தில் துாக்கிட்டு வாலிபர் தற்கொலை
ADDED : ஏப் 04, 2026 04:45 AM

கப்பன் பூங்கா: கப்பன் பூங்காவில் மரத்தில் துாக்கிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இது, கொலை என குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சுரேஷ், 35.பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில் உள்ள வீட்டில் சுரேஷும், அவரது குடும்பத்தினரும் வசிக்கின்றனர்.
எஸ்.பி., சாலையில் உள்ள மொபைல் கடையில் சுரேஷ் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். பின், வெளியே சென்றார். இரவு முழுதும் அவர் வரவில்லை. அவரை பல இடங்களில் குடும்பத்தினர் தேடியும் கிடைக்கவில்லை. மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர்.
இந்நிலையில், நேற்று காலை கப்பன் பூங்காவில் உள்ள மரத்தில் துாக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் உடல் மீட்கப்பட்டது. அவர் சட்டை பையில் இருந்த ஆதார் அட்டை மூலம் சுரேஷ் என்பது தெரிந்தது. அவரது குடும்பத்திற்கு கப்பன் பூங்கா போலீசார் தகவல் கொடுத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் அவர் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. ஆனாலும், சுரேஷின் கால் தரையில் தொங்கிய நிலையில் இருந்ததால் அவரை யாரோ கொலை செய்து, உடலை துாக்கில் தொங்க விட்டிருக்கலாம் என, குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். புகாரின்படி கப்பன் பூங்கா போலீசார் விசாரிக்கின்றனர்.
பெங்களூரு நகர மக்களுக்கு பொழுது போக்கும் இடமாகவும், காலை, மாலையில் நடைபயிற்சி செல்வோருக்கு ஏற்றதாகவும் கப்பன் பூங்கா உள்ளது. இங்கு வாலிபர் தற்கொலை செய்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
