சிகிச்சை தாமதத்தால் வாலிபர் பலி; 'கிம்ஸ்' டாக்டர்கள் மீது குற்றச்சாட்டு
சிகிச்சை தாமதத்தால் வாலிபர் பலி; 'கிம்ஸ்' டாக்டர்கள் மீது குற்றச்சாட்டு
ADDED : மார் 16, 2026 07:10 AM
ஹூப்பள்ளி: விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு, கிம்ஸ் மருத்துவமனையில் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காததால், அவர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தார்வாட் மாவட்டத்தின், மொரபா கிராமத்தில் வசித்தவர் பிரகாஷ், 25. இவர் ஜே.சி.பி., ஓட்டுநராக பணியாற்றினார். மார்ச் 13ம் தேதி இரவு, பணி முடிந்து பைக்கில் வீடு திரும்பும் போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்தார்.
இவரைஆம்புலன்சில், தார்வாட் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்குள்ள டாக்டர்கள், ஹூப்பள்ளியின் கிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கூறினர். அதன்படி அழைத்து சென்றனர். ஆனால் கிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள், பிரகாஷுக்கு குறைந்தபட்சம் முதலுதவி சிகிச்சையும் அளிக்கவில்லை. படுக்கை காலியில்லை என, காரணம் கூறி பொறுப்பின்றி நடந்து கொண்டனர்.
அரை மணி நேரத்துக்கு மேலாக, ஆம்புலன்சிலேயே இருந்தார். அவரை கீழே இறக்கவும், ஊழியர்கள் வரவில்லை. எனவே வேறு வழியின்றி, குடும்பத்தினர் தார்வாட் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் அதற்குள் அவரது மூளை செயல் இழந்தது. மருத்துவமனை, மருத்துவமனையாக அலைவதில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலானது. சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால், பிரகாஷ் இறந்தார். இதற்கு கிம்ஸ் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே காரணம் என, குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
கிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்களும் வலியுறுத்துகின்றனர்.
