போலீஸ்காரரை வாளால் தாக்கிய வாலிபரை சுட்டு பிடித்த எஸ்.ஐ.,
போலீஸ்காரரை வாளால் தாக்கிய வாலிபரை சுட்டு பிடித்த எஸ்.ஐ.,
ADDED : ஆக 28, 2026 11:20 PM
பண்டேபாளையா: கைது செய்ய முயன்ற போது, போலீஸ்காரரை வாளால் தாக்கிய, வாலிபரை, எஸ்.ஐ., துப்பாக்கியால் சுட்டு பிடித்தார்.
பெங்களூரு சோமசுந்தரபாளையா பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாலிபர் ஒருவர், சந்தேகத்திற்கு இடமாக பைக்கில் சுற்றிதிரிந்தார். கையில் வாளையும் வைத்திருந்தார்.
இதுபற்றி அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பண்டேபாளையா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
எஸ்.ஐ., சச்சின் தலைமையில் போலீசார் சென்றனர். போலீசை பார்த்ததும் பைக்கில் வாலிபர் தப்பினார்.
அவரை விரட்டி சென்ற போலீஸ், சோமசுந்தரபாளையா ஏரி பகுதியில் மடக்கினர். வாலிபரை கைது செய்ய முயன்றனர்.
அப்போது தன்னிடம் இருந்த வாளால், போலீஸ்காரர் சந்தீப் காம்ப்ளேயை, வாலிபர் தாக்கினார். கையில் வெட்டு காயம் ஏற்பட்டது.
அதிர்ச்சி அடைந்த எஸ்.ஐ., சச்சின் துப்பாக்கியால் வானத்தை நோக்கி, சுட்டு சரண் அடையும்படி வாலிபரை எச்சரித்தார். அவர் கேட்கவில்லை.
மீண்டும் போலீசாரை வாளால் தாக்க முயன்றார். இதனால் அவரது வலது காலில், எஸ்.ஐ., சச்சின் சுட்டார்.
சுருண்டு விழுந்த அவரை போலீசார் மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். காயம் அடைந்த போலீஸ்காரருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் பெயர் சையது ஜீஷான், 27, என்பதும், சில தினங்களுக்கு முன், மடிவாளாவில் நடந்த சுஹேல் என்பவர் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதும் தெரிந்தது.
வாகன ஓட்டியரை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் வாளுடன் சுற்றியதும் தெரிந்தது.
