/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
டிவிடென்ட் நிதிகளில் முதலீடு செய்வது ஏற்றதா?
/
டிவிடென்ட் நிதிகளில் முதலீடு செய்வது ஏற்றதா?
ADDED : மார் 10, 2025 01:19 PM

சம பங்கு நிதி வகைகளில் ஒன்றாக அமையும் டிவிடென்ட் நிதிகள் அளிக்கும் பலன்கள் மற்றும் அவற்றின் வரம்புகள் பற்றி ஒரு அலசல்.
மியூச்சுவல் பண்ட் முதலீட்டை பொறுத்தவரை பல வகையான நிதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு வகையான நிதிகளும் அவற்றுக்கான தனித்தன்மை அம்சங்கள், சாதகங்கள்மற்றும் பாதகங்களை கொண்டு உள்ளன. எனவே, முதலீட்டாளர்கள் தங்களுக்கு பொறுத்தமான நிதிகளை தேர்வு செய்வது அவசியம்.
அந்த வகையில், டிவிடென்ட் நிதிகளின் தன்மை மற்றும் சாதக, பாதக அம்சங்களை தெரிந்து கொள்வது நல்லது. சீரான வருமானத்தை எதிர்பார்க்கும் மற்றும் சந்தையின் ஏற்ற இறக்கத்தை விரும்பாத முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக கருதப்படும் இந்த வகை நிதிகள் பற்றி பார்க்கலாம்.
டிவிடென்ட் பலன்
மியூச்சுவல் பண்ட் திட்டங்களில், டிவிடென்ட் அளிக்கும் பங்குகளில் பிரதானமாக முதலீடு செய்யும் நிதிகள் டிவிடென்ட் என குறிப்பிடப்படுகின்றன. நிறுவனங்கள் தங்கள் லாபத்தின் ஒரு பகுதியை பங்குதாரர்களுக்கு பிரித்தளிப்பது டிவிடென்ட் ஆக அமைகிறது. பங்கு விலைக்கும், பங்கு ஒன்றுக்கான ஆண்டு டிவிடென்டிற்குமான விகிதம் டிவிடென்ட் பலனாக கருதப்படுகிறது.
இப்படி டிவிடென்ட் அளிக்கும் நிறுவன பங்குகளை தேர்வு செய்து டிவிடென்ட் நிதிகள் முதலீடு செய்கின்றன. பங்குச்சந்தை கட்டுப்பாடு அமைப்பு செபி நெறிமுறைப்படி இந்த வகை நிதிகள், 65 சதவீதம் டிவிடென்ட் பங்குகளில் முதலீடு செய்யப்பட வேண்டும். எஞ்சியவை, இதர பங்குகள், கடன் சார் முதலீடு உள்ளிட்டவற்றில் அமையலாம்.
டிவிடென்ட் அளிக்கும் பங்குகளில் முதலீடு செய்வதால், இந்த வகை நிதிகள் சீரான வருமானம் அளிக்கக்கூடியவை. இந்த வருமானம் நிலையானது இல்லை என்றாலும், மாதாந்திர டிவிடென்ட் பலனுக்கு ஏற்ப அமையும். முதலீடு மூலம் சீரான வருமானம் எதிர்பார்க்கும் பிரிவினருக்கு இவை ஏற்றதாக அமையும்.
பொதுவாக, டிவிடென்ட் அளிக்கும் பங்குகள் வலுவான அடிப்படை கொண்டிருக்கும் என கருதப்படுவதால், வளர்ச்சி வாய்ப்புள்ள சம பங்கு நிதிகளை விட, இவை அதிக அளவில் சந்தையின் ஏற்ற இறக்கத்தின் தாக்கத்திற்கு உள்ளாகாதவை என கருதலாம். நிதிகளில் முதலீடு செய்ய விரும்பும் புதிய முதலீட்டாளர்களுக்கு இவை ஏற்றவை.
பாதக அம்சங்கள்
மேலும், பரவலாக்க உத்திக்கும் டிவிடென்ட் நிதிகள் கைகொடுக்கும். இடர் தன்மையை குறைக்க இவை உதவும். அதே நேரத்தில் இவற்றில் உள்ள பாதகமான அம்சங்களையும் மனதில் கொள்ள வேண்டும்.
பொதுவாக டிவிடென்ட் பங்குகள் வலுவானவை என்றாலும், வளர்ச்சி வாய்ப்பு குறைவாக கொண்டவை என கருதப்படுகின்றன. மேலும், சந்தை ஏறுமுகத்தில் இருக்கும் போது சம பங்குகள் அதிக பலன் அளிக்கக் கூடும் என்றாலும், டிவிடென்ட் நிதிகளில் அது சாத்தியம் இல்லை.
எனவே, இடர் குறைந்த தன்மையை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இவை ஏற்றதாக அமையும். வரி விதிப்பு அம்சத்தையும் மனதில் கொள்ள வேண்டும். சம பங்குகளுக்கு பொருந்தும் வரி விதிப்பு முறை இவற்றுக்கும் பொருந்தும்.
ஆனால், வலுவான அடிப்படை கொண்டவை என்பதால், ஏற்ற இறக்கத்தால் அதிகம் பாதிக்கப்படாமல், மறுவட்டி விகித சுழற்சி காலத்தில் இவை நல்ல பலன் அளிக்கலாம். முதலீட்டாளர்கள் தங்கள் நிதி இலக்குகள், இடர் அம்சங்கள் மற்றும் முதலீடு தொகுப்பு தன்மைக்கு ஏற்ப, இந்த நிதிகளை பரிசீலிக்கலாம்.