6,500 கிலோ எடையுள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விரைவில் விண்ணில் செலுத்தப்படும்; இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
6,500 கிலோ எடையுள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விரைவில் விண்ணில் செலுத்தப்படும்; இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
ADDED : ஆக 10, 2025 07:51 PM

புதுடில்லி: 'அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட 6,500 கிலோ எடையுள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோளை வரும் மாதங்களில் இந்தியா விண்ணில் செலுத்தும்' என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவித்தார்.
சென்னைக்கு அருகிலுள்ள காட்டாங்குளத்தூரில் நடந்த கல்லூரி பட்டமளிப்பு விழாவில் நாராயணன் பேசியதாவது: 1963ம் ஆண்டு இஸ்ரோ நிறுவப்பட்டது. அப்போது நாடு முன்னேறிய நாடுகளை விட 6-7 ஆண்டுகள் பின்தங்கியிருந்தது. அதே ஆண்டில், இந்திய விண்வெளித் திட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் அமெரிக்காவால் ஒரு சிறிய ராக்கெட் நன்கொடையாக வழங்கப்பட்டது.
வரலாற்று நாள்
இந்த சம்பவம் நவம்பர் 21ம் தேதி 1963ம் ஆண்டு அன்று நடந்தது.1975ம் ஆண்டில், அமெரிக்கா வழங்கிய செயற்கைக்கோள் தரவுகள் மூலம், 6 இந்திய மாநிலங்களின் 2,400 கிராமங்களில் 2,400 தொலைக்காட்சிப் பெட்டிகளை வைத்து வெகுஜன தொடர்பை இஸ்ரோ நிரூபித்தது. அந்த ஒரு வித தாழ்மையான தொடக்கத்திலிருந்து ஜூலை 30ம் தேதி இந்திய விண்வெளித் திட்டத்திற்கு ஒரு வரலாற்று நாளாக அமைந்தது.
தோளோடு தோள்
நாங்கள் நிசார் செயற்கைக்கோளை ஏவியுள்ளோம். உலகில் இதுவரை உருவாக்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த செயற்கைக்கோள். இந்த செயற்கைக்கோள் துல்லியமாக சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
இன்று, நாம் முன்னேறிய நாடுகளுடன் தோளோடு தோள் சேர்ந்து இருக்கிறோம். இன்னும் சில மாதங்களில், இந்திய மண்ணிலிருந்து நமது சொந்த லாஞ்சரைப் பயன்படுத்தி அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட 6,500 கிலோ எடையுள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏவப் போகிறது. இது எவ்வளவு குறிப்பிடத்தக்க வளர்ச்சி.
433 செயற்கைக்கோள்கள்
50 ஆண்டுகளுக்கு முன்பு செயற்கைக்கோள் தொழில்நுட்பம் இல்லாத ஒரு நாட்டிலிருந்து, இஸ்ரோ இன்றுவரை 34 நாடுகளின் 433 செயற்கைக்கோள்களை அதன் சொந்த ஏவுதள வாகனங்களைப் பயன்படுத்தி ஏவியுள்ளது. இவ்வாறு நாராயணன் பேசினார்.