/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
கடன் கிடைக்குமா, கிடைக்காதா? இனி சட்டென தெரியும்! யு.பி.ஐ.,யை அடுத்து வருகிறது யு.எல்.ஐ.,
/
கடன் கிடைக்குமா, கிடைக்காதா? இனி சட்டென தெரியும்! யு.பி.ஐ.,யை அடுத்து வருகிறது யு.எல்.ஐ.,
கடன் கிடைக்குமா, கிடைக்காதா? இனி சட்டென தெரியும்! யு.பி.ஐ.,யை அடுத்து வருகிறது யு.எல்.ஐ.,
கடன் கிடைக்குமா, கிடைக்காதா? இனி சட்டென தெரியும்! யு.பி.ஐ.,யை அடுத்து வருகிறது யு.எல்.ஐ.,
ADDED : ஆக 27, 2024 03:09 AM

பெங்களூரு;எளிதாக பணம் செலுத்துவதற்கு யு.பி.ஐ., பரிவர்த்தனை வசதி இருப்பது போல, எளிதாகக் கடன் பெறவும், வழங்கவும் யு.எல்.ஐ., எனும் புதிய வசதி விரைவில் அமலாகும் என, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் 90வது ஆண்டை முன்னிட்டு, பெங்களூரில் நடைபெறும் 'டிஜிட்டல் பப்ளிக் இன்ப்ரா' மாநாட்டை துவங்கி வைத்து அவர் கூறியதாவது:
கடன் வழங்குவதில் எந்த பிரச்னையும் இல்லாத தொழில்நுட்ப தளம் சோதனை அடிப்படையில் கடந்த ஆண்டே துவங்கப்பட்டது. அதை இனி, 'யுனிபைட் லெண்டிங் இன்டர்பேஸ்' அதாவது, யு.எல்.ஐ., என அழைக்கவுள்ளோம்.
இதன்படி, கடன் பெற விண்ணப்பிப்பவர் குறித்த தகவல்கள், நில ஆவணங்கள் உட்பட முழுமையான விபரங்கள், தகவல் சேவை அளிப்பவர்கள் வாயிலாக, கடன் வழங்கும் நிறுவனங்கள் பெற முடியும்.
குறிப்பாக, கிராமப்புற மற்றும் சிறுகடன் பெறுவோரின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நேரம் பெருமளவு குறையும்.
முறைப்படுத்தப்பட்ட 'புரோகிராமிங்' வாயிலாக, கடன் விண்ணப்பதாரரின் விபரங்களை விரைவாக சரிபார்க்க இது வழி செய்கிறது.
முற்றிலும் விண்ணப்பதாரரின் ஒப்புதலுடன் அவரது விபரங்கள் சரிபார்க்கப்படும் என்பதால், அவர்களது தனிப்பட்ட தகவல் உரிமை பாதுகாக்கப்படும். பல்வேறு தொழில்நுட்ப சேவைகளின் சிக்கலான பரிசீலனைகளை யு.எல்.ஐ., குறைத்து, விரைவான கடன் சேவையை வங்கிகள், நிதி நிறுவனங்கள் வழங்க முடியும்.
சிறு, குறு, நடுத்தர நிறுவனக் கடன் மற்றும் விவசாய கடன் பெறுவோர் அதிகளவு ஆவணங்களை வழங்குவது தவிர்க்கப்பட்டு, மின்னணு முறையிலேயே விரைவாக கடன் பெற இம்முறை உதவும்.
சோதனை அடிப்படையில் கிடைத்த சாதகமான அனுபவங்களால், விரைவில் நாடு முழுதும் யு.எல்.ஐ., அறிமுகம் செய்யப்படும்.
நாட்டின் மின்னணு கட்டமைப்பு பயணத்தில், பணப்பரிவர்த்தனைக்கு யு.பி.ஐ., பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதுபோல, கடன் வழங்குவதில் யு.எல்.ஐ., புரட்சிகரமான வசதியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.