/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
தேவையான அளவு வீட்டுக்கடன் பெறும் வழிமுறைகள்
/
தேவையான அளவு வீட்டுக்கடன் பெறும் வழிமுறைகள்
ADDED : செப் 09, 2024 12:59 AM

நிதி நிலைக்கு ஏற்ற வீட்டை தேர்வு செய்து, கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்திக்கொள்வது உள்ளிட்ட செயல்கள் மூலம் கடன் தொகையை அதிகரிக்கலாம்.
சொந்த வீடு வாங்க முயற்சிக்கும் போது பல்வேறு அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றாலும், கடன் தொகையும் சரியானதாக அமைய வேண்டியது முக்கியம். விரும்பிய வீட்டை வாங்க கூடுதலாக கடன் வாங்கும் போது நிதி சுமைக்கு உள்ளாக நேரும்.
அதே நேரத்தில், கடன்தாரர் விரும்பும் தொகையை விட குறைந்த தொகைக்கே வங்கிகள் அனுமதி அளிக்கும் நிலையும் சிக்கலை உண்டாக்கலாம். எனவே, செலவை அதிகரிக்காமல் அதிக கடன் தொகை பெறுவதற்கான வழிகளை அறிந்திருப்பது அவசியம்.
கடன் தகுதி
வீட்டுக்கடன் உள்ளிட்ட எந்த வகை கடன் பெறுவதிலும் கிரெடிட் ஸ்கோர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவரது கடன் தகுதியை தீர்மானிக்கும் அம்சங்களில் ஒன்றாக கிரெடிட் ஸ்கோர் அமைகிறது. எனவே கடன் பெற விண்ணப்பிக்கும் முன், எவரும் தனது கிரெடிட் ஸ்கோரை அறிந்து கொள்ள வேண்டும்.
கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருந்தால் கடன் தகுதியும் அதிகரிக்கும். அதிக கிரெடிட் ஸ்கோர் இருக்கும் போது வட்டி விகிதமும் சாதகமாக அமையும். கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால் அதற்கான காரணத்தை கண்டறிந்து, கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பிற கடன்கள் இருந்தால் அவற்றை அடைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். வருமானத்திற்கும் கடனுக்குமான விகிதம் குறைவாக இருப்பது நல்லது.
கடன் பெறுவதற்கான தயார் நிலையில் இருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதற்காக நிதி நிலையை ஆராய வேண்டும். வீடு வாங்க குறிப்பிட்ட தொகை முன்பணமாக செலுத்த வேண்டும்.
இந்த தொகையை கைவசம் வைத்திருக்க வேண்டும். இதற்கான சேமிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். வாங்க இருக்கும், வீட்டின் மதிப்பிற்கு ஏற்ப முன்பணம் தொகை அமையும் என்பதால், இந்த தொகை முக்கியமாகிறது. முன்பணம் செலுத்துவது மொத்த கடன் சுமையையும் குறைக்க உதவும்.
வாய்ப்புகள்
முதலில் நாடும் வங்கியின் கடன் வாய்ப்பை மட்டும் தேர்வு செய்யாமல் மற்ற வாய்ப்புகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். எந்த இடத்தில் சிறந்த கடன் அளவு கிடைக்கும் என்பதை கண்டறிய வேண்டும்.
கடனுக்கான செயல்முறை கட்டணம், நிபந்தனைகள், வட்டி விகிதம், இதர சலுகைகள் உள்ளிட்ட அம்சங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஒரு சில வங்கிகள் குறிப்பிட்ட பிரிவினருக்கான சலுகைகளையும் வழங்கலாம்.
இதன் மூலம் தேவைக்கேற்ற சாதகமான அம்சங்கள் கொண்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்தை தேர்வு செய்வது சாத்தியமாகலாம்.
கடனுக்கு விண்ணப்பிக்கும் போது தேவையான ஆவணங்களை எல்லாம் கைவசம் வைத்திருப்பது, கடன் செயல்முறை சிக்கல் இல்லாமல் அமைய உதவும். வருமான சான்றிதழ், வங்கி கணக்கு அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வங்கிகள் கேட்க கூடிய எல்லா ஆவணங்களையும் வைத்திருப்பது நல்லது.
கடன் அளவை பொருத்தவரை, விருப்பம் மட்டும் அல்லாமல், ஒருவரது நிதி நிலைக்கு ஏற்பவும் அமைந்திருக்க வேண்டும். இந்த செயல்முறைகள் மூலம் கடன் பெறுவதை எளிதாக்கி கொள்ளலாம்.