UPDATED : அக் 27, 2025 06:51 AM
ADDED : அக் 27, 2025 06:28 AM

கொல்கட்டா: மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில் இருந்து சீனாவின் குவாங்ஷோ நகருக்கு விமானம் ஒன்று நேற்று புறப்பட்டதை அடுத்து, ஐந்து ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த இந்தியா - சீனா இடையிலான விமான சேவை மீண்டும் துவங்கியது.
எல்லை பிரச்னை
நம் நாட்டுக்கும், நம் அண்டை நாடான சீனாவுக்கும் இடையே, கடந்த 2002 முதல் நேரடி விமான போக்குவரத்து சேவையை சீன 'ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்' நிறுவனம் அளித்தது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, 2020ல் இரு நாடுகளுக்கு இடையிலான விமான போக்கு வரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. லடாக் எல்லை பிரச்னையில் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலை அடுத்து, அந்த சேவை நிரந்தரமாக நிறுத்தப்பட்டது.
இரு நாட்டு உறவிலும் இருந்த விரிசல் விலகியதை அடுத்து, இம்மாத இறுதியில் இந்தியா - சீனா இடையே விமான சேவை மீண்டும் துவங்கும் என நம் சிவில் விமான போக்கு வரத்து இயக்குநரகம் அறிவித்திருந்தது.
உற்சாகம்
அதன்படி, மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில் இருந்து சீனாவின் குவாங்ஷோ நகருக்கு, 'இண்டிகோ' விமானம் நேற்றிரவு 10:00 மணிக்கு புறப்பட்டது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானத்தில் இரு நாட்டு பயணியரும் உற்சாகத்துடன் பயணம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம், அடுத்த மாதம் 9ம் தேதி முதல் அந்நாட்டின் ஷாங்காய் - டில்லி இடையேயான விமானப் போக்கு வரத்தை துவங்க உள்ளது. இதன் வாயிலாக, இந்தியா - சீனா இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக உறவு விரிவடையும் என இரு நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

