/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
வங்கிக்கு வங்கி வேறுபடும் நிபந்தனைகள் ஒரே மாதிரி ஆர்.பி.ஐ., வெளியிட வேண்டும் தொழில் முனைவோர் வலியுறுத்தல்
/
வங்கிக்கு வங்கி வேறுபடும் நிபந்தனைகள் ஒரே மாதிரி ஆர்.பி.ஐ., வெளியிட வேண்டும் தொழில் முனைவோர் வலியுறுத்தல்
வங்கிக்கு வங்கி வேறுபடும் நிபந்தனைகள் ஒரே மாதிரி ஆர்.பி.ஐ., வெளியிட வேண்டும் தொழில் முனைவோர் வலியுறுத்தல்
வங்கிக்கு வங்கி வேறுபடும் நிபந்தனைகள் ஒரே மாதிரி ஆர்.பி.ஐ., வெளியிட வேண்டும் தொழில் முனைவோர் வலியுறுத்தல்
ADDED : டிச 09, 2025 01:02 AM

சென்னை: கடன் அடமான ஒப்பந்தத்தில், அபராதம், சட்டப்பூர்வ நடவடிக்கை உள்ளிட்ட நிபந்தனைகளை, அனைத்து வங்கிகளும் ஒரே மாதிரியாக பின்பற்ற நடவடிக்கை எடுக்குமாறு, ரிசர்வ் வங்கிக்கு தொழில் முனைவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய தொழில் துவங்கவும், தொழிலை விரிவாக்கம் செய்யவும், மூலப்பொருள் கொள்முதலுக்கும் வங்கிகளில், தொழில் முனைவோர் கடன் வாங்குகின்றனர்.
அப்போது, வங்கிகளுடன் அடமான ஒப்பந்தம் செய்யும்போது, கடனை சரிவர செலுத்தவில்லை எனில், அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இதில் ஒவ்வொரு வங்கியிலும், வெவ்வேறு நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதனால், தொழில் முனைவோர் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து, 'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க தலைவர் வாசுதேவன் கூறியதாவது:
தமிழகத்தில் பெரும்பாலான சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள், வங்கிகளில் கடன் வாங்கி தான் தொழில் செய்கின்றன. கடன் வாங்கும்போது, அடமான ஒப்பந்தம் செய்யப்படுகிறது.
அதில், கடனை சரிவர செலுத்தவில்லை எனில் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கை உள்ளிட்ட நிபந்தனைகள், ஒவ்வொரு வங்கியிலும் வெவ்வேறு வகையில் இருக்கின்றன.
அதாவது, ஒரே கடனுக்கான அபராதம் ஒரு வங்கியில் குறைவாகவும், இன்னொரு வங்கியில் மிக அதிகமாகவும் உள்ளது. நிபந்தனைகள் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. இதனால், பல தொழில் முனைவோரால் அவற்றை புரிந்து கொள்ள இயலவில்லை.
எனவே, சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான அடமான ஒப்பந்த நிபந்தனைகள், வட்டி ஆகியவை ஒரே மாதிரியாக இருக்கும் வகையில், ரிசர்வ் வங்கி விதிகளை வெளியிட வேண்டும்.
இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கிக்கு கடிதமும் அனுப்பப்பட்டு உள்ளது.
மேலும், குறுந்தொழில் நிறுவனங்களுக்கு, 5 கோடி ரூபாய்க்கு கீழான அனைத்து வகை கடன்களும், அடமான ஒப்பந்தம் இல்லாமல் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில், சிறுதொழில் கடனுக்கான வட்டி, 3 முதல் 4 சதவீதமாக தான் உள்ளது. நம் நாட்டில், 12 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. இதுவும் நிறுவனங்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது. ஒரே மாதிரியாக நிபந்தனை இல்லாததால், தொழில் முனைவோர் பாதிக்கப்படுகின்றனர்.

