/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
விசா, மாஸ்டர் கார்டுகளுக்கு ஆர்.பி.ஐ., உத்தரவு: நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிர்ச்சி
/
விசா, மாஸ்டர் கார்டுகளுக்கு ஆர்.பி.ஐ., உத்தரவு: நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிர்ச்சி
விசா, மாஸ்டர் கார்டுகளுக்கு ஆர்.பி.ஐ., உத்தரவு: நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிர்ச்சி
விசா, மாஸ்டர் கார்டுகளுக்கு ஆர்.பி.ஐ., உத்தரவு: நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிர்ச்சி
ADDED : பிப் 15, 2024 02:15 AM

மும்பை: ரிசர்வ் வங்கி சாட்டையின் நீளம் அதிகரித்து கொண்டே போகிறது. அண்மையில் 'பேடிஎம் பேமென்ட்ஸ்' வங்கிக்கு எதிராக நடவடிக்கை எடுத்த நிலையில், தற்போது கார்ப்பரேட் கார்டுகள் அல்லது வணிக கார்டுகள் வழங்கும் நிறுவனங்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றி உள்ளது.
இதனால், நிதிதொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் நிலை குறித்து அரண்டுபோய் உள்ளன.
ரிசர்வ் வங்கி, 'விசா' மற்றும் 'மாஸ்டர்கார்டு' நிறுவனங்களிடம், வணிக அட்டைகள் வாயிலாக பேமென்டுகளை மேற்கொள்வதற்கு அனுமதிப்பதை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
கே.ஒய்.சி., விதிகளுக்கு இணங்காத வணிகர்களுக்கு, கார்டு வாயிலாக பணம் செல்வதை தடுக்கும் நோக்கில், ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக, தொழில் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலை தொடர்ந்து, விசா, மாஸ்டர் கார்டு நிறுவனங்கள், கே.ஒய்.சி., விதிகளுக்கு இணங்காத அனைத்து வணிகர்கள் மற்றும் வணிக விற்பனை நிலையங்களுக்கு, தங்கள் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
எனினும், இந்த அறிவிப்பு வருவதற்கு முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட எந்த ஒரு பணப் பரிவர்த்தனையும், இதுவரை உள்ள நடைமுறையின் படி முடித்து வைக்கப்படும் என்று 'விசா' நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கான தெளிவான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், கே.ஒய்.சி., விதிகளை பின்பற்றாத வணிகர்களுக்கு, கார்டு வாயிலாக பேமென்டுகள் செல்வதை தவிர்க்கும் நோக்கிலேயே, ரிசர்வ் வங்கி இம்முடிவை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இத்தகைய வணிகர்களின் வங்கிக் கணக்குகள், கே.ஒய்.சி., விதிகளுக்கு இணங்க துவங்கப்பட்டிருந்தாலும், கார்டு வாயிலாக பேமென்டுகளை பெற, அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுஇருக்காது.
இது தொடர்பாக, நிதி தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் ஒருவர் தெரிவித்ததாவது:
பொதுவாக, நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் வருவதற்கு முன்பு வரை, வணிகர்கள், தங்களுடைய வணிகத்துக்கான பணப்பரிவர்த்தனையை வங்கி கணக்கிலிருந்து நெட்பேங்கிங் அல்லது ஆர்.டி.ஜி.எஸ்., வாயிலாக மேற்கொண்டு வந்தனர். கார்டு வாயிலாக செலுத்துவதில்லை.
ஆனால், நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் வந்த பின், வணிக கார்டுகள் வாயிலாக பணம் செலுத்த துவங்கினர்.
இந்த மாதிரியான பேமென்டுகளை மேற்கொள்வதில் ஈடுபட்டு வரும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, அடுத்த அறிவிப்பு வரும் வரை இது தொடர்பான செயல்பாடுகளை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வணிகர்கள் வாடகை உள்ளிட்டவற்றுக்கு பணம் செலுத்துவது கூட பாதிக்கப்படும். நிதிதொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருவதும், தொழில் வளர்ச்சிக்கு அவ்வளவு நல்லதல்ல.
இவ்வாறு தெரிவித்தார்.

