/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
அரிய வகை கனிமங்களில் முதலீடு செய்ய லத்தீன் அமெரிக்காவில் இந்தியாவுக்கு வாய்ப்பு
/
அரிய வகை கனிமங்களில் முதலீடு செய்ய லத்தீன் அமெரிக்காவில் இந்தியாவுக்கு வாய்ப்பு
அரிய வகை கனிமங்களில் முதலீடு செய்ய லத்தீன் அமெரிக்காவில் இந்தியாவுக்கு வாய்ப்பு
அரிய வகை கனிமங்களில் முதலீடு செய்ய லத்தீன் அமெரிக்காவில் இந்தியாவுக்கு வாய்ப்பு
ADDED : நவ 16, 2025 11:52 PM

புதுடில்லி: லத்தீன் அமெரிக்க நாடுகளான பெரு, சிலி, வெனிசுலாவில், அரிய வகை கனிமங்கள் துறையில் முதலீடு செய்ய இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
கடந்த 14, 15ம் தேதிகளில் விசாகப்பட்டினத்தில் சி.ஐ.ஐ., அமைப்பின் மாநாடு நடைபெற்றது.
இதில் பங்கேற்ற வெனிசுலா சுற்றுச்சூழல் சுரங்க வளர்ச்சித்துறை அமைச்சர் ஹெக்டர் சில்வா, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயலுடன் பேச்சு நடத்தினார்.
அப்போது, அரிய வகை கனிமங்கள் உட்பட இதர துறைகளிலும் பொருளாதார ஒத்துழைப்பை இந்தியா வழங்க வேண்டும் என்று வெனிசுலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விருப்பம் இரு நாடுகளுக்கும் இடையே எண்ணெய் வணிகமே இணைப்பு புள்ளியாக இருந்து வந்தது. இனிவரும் காலங்களில் மற்ற துறைகளிலும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தற்போது விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கோயல், இந்தியா - வெனிசுலா இடையேயான கூட்டு குழு கூட்டம், கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறாமல் இருப்பதாகவும், இதை மீண்டும் தொடர வேண்டுமென்றும் தெரிவித்தார்.
ஓ.என்.ஜி.சி., நிறுவனம் அந்நாட்டில் செயல்பட்டு வருவது, சுரங்கம் மற்றும் எண்ணெய் எடுப்புத்துறைகளில் இருதரப்பு நல்லுறவுக்கு வழிவகுக்கும் என்று கூறிய அவர், மருந்து மற்றும் வாகன உற்பத்தியில் கூட்டுறவை பலப்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருள் பயன்பாட்டுக்கு மாறுவதற்கான இலக்குகளை நோக்கி இந்தியா செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே பெரு, சிலி உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் அரிய வகை கனிமங்கள் துறையில் வர்த்தகப் பேச்சுகளை இந்தியா நடத்தி வருகிறது. இதற்கான பலனும் கிடைத்து வருகிறது.
பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் கடந்த 3 - 5 தேதிகளில், 9வது இந்தியா - -பெரு வர்த்தக உடன்பாட்டு கூட்டம் நடைபெற்றது. வர்த்தகம், சுங்கம், கனிமம் போன்ற துறை சார்ந்த பேச்சுகளில் பல்வேறு முன்னேற்றங்கள் எட்டப்பட்டிருக்கின்றன.
வெனிசுலா மட்டுமல்லாது, சிலியுடனான வர்த்தக உறவுகளும் புதுப்பிக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் 27-, 30ம் தேதிகளில் இந்தியாவும், சிலியும் இணைந்து, 3வது விரிவடைந்த பொருளாதார கூட்டு ஒப்பந்த பேச்சுகளை நடத்தின.
சாண்டியாகோவில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சரக்கு மற்றும் சேவைகள், முதலீட்டு வளர்ச்சி, அறிவுசார் சொத்துரிமை, தொழில்நுட்ப தர நிலைகள், அரிய வகை கனிமங்கள் ஆகிய துறைகளின் வர்த்தகம் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.
முதல்முறை பரஸ்பரம் சந்தைகளை திறந்துவிடுவது, வினியோகச் சங்கிலியை பலப்படுத்துவது ஆகியவை குறித்த காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்பதை இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.
இந்தியா மேற்கொள்ளும் வர்த்தக ஒப்பந்த விவாதங்களில் அரியவகை கனிமங்கள் இடம்பெறுவது இதுவே முதல்முறை.
இன்றளவில், பெரு நாட்டிலிருந்து தங்கத்தையும் சிலியிலிருந்து லித்தியம், தாமிரம், மாலிப்டினம் ஆகிய கனிமங்களையும் இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.
அதே நேரத்தில், எதிர்கால தேவை மற்றும் விலை உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சுரங்க உரிமைகளை பெற்று தக்கவைக்கவும் இந்தியா முயன்று வருகிறது. ஏற்கனவே சிலியின் தாமிர சுரங்க ஏலங்களில் பங்குபெற இந்திய நிறுவனங்கள் தகுதி பெற்றுள்ளன.
அதிகரிக்கும் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, நம் நாட்டில் தனிநபர் தாமிர பயன்பாடு 50 சதவீதத்துக்கும் குறைவாகும். இருப்பினும், தாமிரத்தின் தேவை எதிர்காலத்தில் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது.
அதிக வரிவிதிப்பு உள்ளிட்ட காரணங்களால், உலக வர்த்தகம் பாதிப்புக்குள்ளாகும் இன்றைய சூழலில், இதுபோன்ற ஒப்பந்தங்கள் முக்கிய துறைகளில் இந்தியாவுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

