/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
கடன் பத்திர முதலீடுக்கு, காப்பீடு பாதுகாப்பு உண்டா?
/
கடன் பத்திர முதலீடுக்கு, காப்பீடு பாதுகாப்பு உண்டா?
கடன் பத்திர முதலீடுக்கு, காப்பீடு பாதுகாப்பு உண்டா?
கடன் பத்திர முதலீடுக்கு, காப்பீடு பாதுகாப்பு உண்டா?
ADDED : நவ 16, 2025 11:48 PM

என் மகளின் மேற்படிப்புக்காக சேமிக்க விரும்புகிறேன். இப்போது அவள் வயது 4. என்ன விதமான சேமிப்புகளை செய்தால், கல்லுாரி செல்லும் வயதில் போதிய பணம் இருக்கும்?
சங்கீதா ஸ்ரீராம், திருவண்ணாமலை. ஒவ்வொரு ஆண்டும், நம் நாட்டில் கல்விச் செலவுகள் உயர்ந்து வருகின்றன. நீங்கள் வசிக்கும் நகரத்தைப் பொறுத்து, ஆண்டு ஒன்றுக்கு 8 முதல் 12 சதவீதம் வரை உயர்வு இருக்கிறது. இதற்கு 'கல்வி பணவீக்கம்' என்று பெயர்.
உதாரணத்துக்கு, இப்போது ஒரு பொறியியல் படிப்புக்கான ஆண்டு கட்டணம் 4 லட்சம் ரூபாய் என்றால், 6 - 7 ஆண்டுகளில் அது 8 லட்சமாக உயரும். 12 - 14 ஆண்டுகளில் அதுவே 16 லட்சம் ரூபாயாகும்.
உங் கள் மகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்க விரும்பினீர்கள் என்றால், ரூபாயின் மதிப்பு சரிவையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அது தோராயமாக 4, 5 சதவீதம் அளவுக்கு இருக்கிறது.
இந்த கணக்குகளை பார்த்து பயப்பட வேண்டாம். தொலைநோக்கு பார்வையோடு திட்டமிடுவதற்கு உதவுபவை தான் கணக்குகள். உங்கள் மகள் 18 வயதை எட்டுவதற்கு இன்னும் 14 ஆண்டுகள் உள்ளன.
நான்காண்டு பொறியியல் கல்விக்கான செலவுகள் தற்போது தோராயமாக 16 லட்சம் ரூபாய் ஆகிறது என்றால், 14 ஆண்டுகள் கழித்து, அதுவே 60 லட்சத்து 75,000 ஆகும்.
அதற்கு இப்போது முதலே மாதம் 15,000 ரூபாய் வீதம், 12 சதவீத ரிட்டர்ன் தரக்கூடிய மியூச்சுவல் பண்டு திட்டங்களில் எஸ்.ஐ.பி., போட்டு வந்தால், அன்றைய தேதியில் இந்த செலவுகளை சுலபமாக கையாளலாம்.
ஆண்டுக்கு 11 சதவீதம் வட்டி தரக்கூடிய கார்ப்பரேட் கடன் பத்திரங்களில், 5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய விரும்புகிறேன். டிரிப்பிள் ஏ ரேட்டிங்கோடு, 11 சதவீத வட்டி தரக்கூடிய கார்ப்பரேட் பாண்டுகளை பரிந்துரைக்க இயலுமா?
எஸ்.சிவகுமார், மின்னஞ்சல். தனிப்பட்ட எந்த பரிந்துரைகளையும் இந்த பகுதியில் செய்ய இயலாது. சிறந்த நிதி ஆலோசகரை அணுகுங்கள். உங்களுடைய இலக்குக்கு ஏற்ப, அவர் சரியான கார்ப்பரேட் பத்திரங்களை தேர்வு செய்ய உதவக்கூடும்.
கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் பணத்திற்கு, வைப்பு நிதியில் உள்ளது போன்ற 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு உத்தரவாதம் உள்ளதா?
ஞா.பரமேஸ்வரன், சென்னை. இல்லை. ஆனால், இங்கே உத்தரவாதம் வேறு வகையில் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் வெளியிடும் கடன் பத்திரங்களுக்கு வலிமை சேர்ப்பது அந்தந்த அரசுகளே. இருப்பதிலேயே ரிஸ்க் குறைவான முதலீடுகளில் இது ஒன்று.
தனியார் பெருநிறுவன கடன் பத்திரங்களை பொறுத்தவரை, அந்த நிறுவனத்தின் நற்பெயரும், அவர்கள் ஈட்டும் நீண்டகால லாபமும் முக்கியமானவை. அதே நேரத்தில், அந்த கடன் பத்திரங்களுடைய ரேட்டிங்கை கவனித்து, அது ஏற்புடையதுதானா என்பதை கணித்து வாங்கலாம்.
ஒரு குறிப்பிட்ட நிதி நிறுவனம், 12 ஆண்டுகளாக உள்ளதாகவும், அவர்கள் மற்ற நிதி நிறுவனங்களை விட அதிகமாக, அதாவது, 10.50% வரையும் மற்றும் 444 நாட்களுக்கு 11.50% வரையும் வட்டி தருவதாக விளம்பரம் செய்கின்றனர். இதை நம்பலாமா?
முரளி பார்த்தசாரதி, சென்னை. அந்தக் காலத்தில், 'உங்கள் முதல் செலவு, சேமிப்பாக இருக்கட்டும்' என்றெல்லாம் பிரசாரம் செய்த நிதி நிறுவனங்கள், இன்று இருந்த இடம் தெரியாமல் போயிருக்கின்றன என்பது வரலாறு.
நீங்கள் குறிப்பிடும் நிதி நிறுவனத்தின் ஆண்டு வரவு - செலவு அறிக்கை, அவர்கள் எந்தெந்த துறைகளில் முதலீடு செய்துள்ளனர், என்ன வட்டி வருவாய் ஈட்டுகின்றனர், வாராக்கடன் எவ்வளவு, நிர்வாக, விளம்பரச் செலவுகள் எவ்வளவு என்றெல்லாம் தெரிந்துகொள்ள முடியுமானால், அவற்றை தெரிந்து கொண்டு, அதன் பிறகு 'நம்பலாமா' என்ற முடிவுக்கு வாருங்களேன்.
நான் லட்சுமி விலாஸ் வங்கி பெயரில் 2,304 பங்குகள் வைத்துள்ளேன். என் கணக்கில் வேறு ஷேர்கள் கிடையாது. லட்சுமி விலாஸ் வங்கி டி.பி.எஸ்., வங்கியுடன் இணைந்து விட்டதால், ஷேர்கள் மதிப்பு இழந்ததை தொடர்ந்து, சிலர் நீதிமன்றம் சென்றுள்ளனர். எனவே, என் கணக்கில் உள்ள ஷேர்களை, என் மனைவி பெயருக்கு மாற்ற வழி உள்ளதா? நான் என் டீமேட் கணக்கை முடிக்க விரும்புகிறேன்.
ஜே.சி.பத்மநாபன், வாட்ஸாப்
உங்கள் டீமேட் கணக்கை முடிப்பதற்கு இது தான் ஒரே வழி. வேறு ஒருவருடைய டீமேட் கணக்குக்கு பங்குகளை மாற்றினால் தான், உங்கள் கணக்கை முடிக்க முடியும். உங்கள் புரோக்கர் யாரோ அவரை அணுகுங்கள்; அவர் வழி காட்டுவார்.
தனியார் துறையில் பணிபுரிந்து வருபவர்களிடம் பிடித்த தொகை, நிறுவனம் செலுத்திய தொகை, இவை இரண்டும் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் தான் இருக்கின்றன. தொழிலாளர் ஓய்வூதியம் என்ற பெயரில் மிகக் குறைந்த தொகையே வழங்கப்படுகிறது. தொழிலாளர் மரணத்திற்கு பின்னர், அவர் மனைவிக்கு அதில் பாதி தொகை வழங்கப்படுகிறது. அவர் மனைவியின் இறப்பிற்கு பிறகு, வாரிசுக்கும் கொடுக்க வேண்டியது தானே?
ஆ.லோகியா, சென்னை. பிள்ளைகளுக்கும் வழங்கப்படுகிறதே? ஓய்வூதியம் பெறுபவரும், அவரது மனைவியும் மறைந்த பின், அவர்களுடைய பிள்ளைகளில் இருவர், 25 வயதை எட்டும் வரை, அவர்களது தாய் பெற்ற ஓய்வூதியத்தில் 25 சதவீதம் பெறுவர்.
இதில் முழுமையான மாற்றுத் திறனாளியாக இருந்தால், அவருக்கு தாயுடைய ஓய்வூதியத்தில் 75 சதவீதம் வரை கிடைக்கும்.
பி.எப்., ஓய்வூதியம் என்பது, ஒரு பணியாளர், அவருடைய மனைவி ஆகியோருடைய இறுதி காலம் வரை வாழ்வதற்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டதே அன்றி, அது சேமிப்பு மாதிரி அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு செல்வதற்கானது அல்ல.

