'இந்தியா ஓர் அற்புதமான சந்தை' ஆப்பிள் தலைமை அதிகாரி மகிழ்ச்சி
'இந்தியா ஓர் அற்புதமான சந்தை' ஆப்பிள் தலைமை அதிகாரி மகிழ்ச்சி
ADDED : மே 03, 2024 10:02 PM

புதுடில்லி:கடந்த மார்ச் காலாண்டில், 'ஆப்பிள்' நிறுவனம், இந்தியாவில் இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக, அதன் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில், கடந்த மார்ச் காலாண்டில், ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய், சாதனை உச்சத்தை எட்டியதாகவும், இந்தியா ஓர் அற்புதமான சந்தையாக இருந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்தியா அற்புதமான சந்தையாக இருந்து வருகிறது. அதன் மீது நாங்கள் முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம். மார்ச் காலாண்டில், அங்கு எங்களது செயல்பாடு திருப்திகரமாக இருந்தது.
இந்தியாவில் நிறுவனத்தின் செயல்பாடுகளை தொடர்ந்து மேம்படுத்தியும், விரிவுபடுத்தியும் வருகிறோம். கடந்தாண்டு தான் அங்கு இரண்டு ஆப்பிள் ஸ்டோர்களை துவக்கினோம். அந்நாட்டில் ஸ்மார்ட்போன் சந்தையில் போட்டித் தன்மையுடன் நீடித்திருக்க ஐபோன்களை அங்கு தயாரிப்பது முக்கியமானது. அதன் காரணமாக தயாரிப்பையும் அங்கு மேற்கொண்டு வருகிறோம். இந்தியாவில் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதை நாங்கள் உணர்கிறோம்.
அந்நாட்டில் டெவலப்பர்கள் அதிகரித்து வருவதால், அவர்களுக்கான சூழலை மேம்படுத்துவதிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். ஒட்டுமொத்தமாக, டெவலப்பர்கள், ஸ்மார்ட்போன் சந்தை மற்றும் ஸ்டோர்களின் செயல்பாடுகள் என அனைத்தையும் மேம்படுத்த தொடர்ந்து செயலாற்றி வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.