ADDED : ஏப் 11, 2024 01:27 AM

புதுடில்லி: 'கருவி' எனும் பிராண்டு வாயிலாக, தயாரிப்புத்துறையில் பயன்படுத்தப்படும் 'பவர் டூல்ஸ்' எனும் சக்தி வாய்ந்த கருவிகளை விரைவில் தயாரிக்க உள்ளதாக, 'ஜோஹோ' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:ஜோஹோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஒருவர், ஒரு பெட்டி முழுக்க கருவிகளுடன், என்னை சில ஆண்டுகளுக்கு முன் சந்தித்தார். இக்கருவிகளை, ஜோஹோ தயாரிக்க வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்தார்.
இதுகுறித்து, முதலில் எனக்கு தயக்கம் இருந்தாலும், இதன் வாயிலாக, கிராமப்புறங்களில் ஏற்படுத்தக்கூடிய வேலைவாய்ப்பை பற்றி நான் யோசித்தேன். இதையடுத்து, இக்கருவிகளை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறை கண்டறிய, சிறிய பொறியியல் குழு ஒன்றை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைத்தோம்.
பல்வேறு வடிவமைப்பு திருத்தங்களுக்கு பின், தற்போது வணிக ரீதியாக இக்கருவிகளை தயாரிக்க ஆயத்தமாகி உள்ளோம். கருவிகளுக்கானது என்பதால், கருவி என்றே பிராண்டு பெயர் சூட்டியுள்ளோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

