ADDED : ஏப் 23, 2024 10:42 PM

மும்பை:அசாதாரண வானிலை சூழல், நீடித்த புவிசார் அரசியல் பதற்றங்கள், கச்சா எண்ணெய் விலையில் நிலையற்ற தன்மை ஆகியவை, பணவீக்கத்தை அதிகரிக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று, ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான சில்லரை விலை பணவீக்கம், ஜனவரி, பிப்ரவரி மாதங்களைக் காட்டிலும், கடந்த மாதம் சற்றே குறைந்து காணப்பட்டது. இதையடுத்து, பணவீக்கம் குறைந்துள்ளதால், ஓர் ஆண்டுக்கும் மேலாக 6.50 சதவீதத்திலேயே மாற்றமின்றி தொடரும் ரெப்போ வட்டி விகிதம், விரைவில் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக நிலவி வருகிறது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி அறிக்கையில் தற்போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டின் முதல் காலாண்டில், உலக பொருளாதார வளர்ச்சி தக்க வைக்கப்பட்டுள்ளதாகவும், உலக வர்த்தகத்துக்கான எதிர்கால கண்ணோட்டம் நம்பிக்கை அளிக்கும்படியாக மாறி வருவதாகவும், ரிசர்வ் வங்கி உலக பொருளாதார நிலை குறித்த தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

