ஜி.எஸ்.டி., இணையதளத்தில் சரக்கு இறக்குமதி விபரங்கள்
ஜி.எஸ்.டி., இணையதளத்தில் சரக்கு இறக்குமதி விபரங்கள்
ADDED : நவ 01, 2025 02:12 AM

புதுடில்லி: ஜி.எஸ்.டி., செலுத்தும் வணிகர்களின் வசதிக்காக, ஜி.எஸ்.டி., இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகள் குறித்த விபரங்களை வழங்க, இணையதளத்தில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 'இன்வாய்ஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம்' எனும் பகுதியில் இந்த வசதி அறிமுகமாகி உள்ளது.
இனி வணிகர்கள் சரக்கு இறக்குமதி தொடர்பான விபரங்களை பதிவு செய்து, எளிதாக உள்ளீட்டு வரிப்பயன் பெறலாம். வணிகர்கள், சுங்க அதிகாரிகளிடம் தாக்கல் செய்யும் 'பில் ஆப் என்ட்ரி' எனும் ஆவணத்தின் வாயிலாக, வெளிநாடுகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் பொருட்களின் விபரங்கள் புதிய வசதியில் நேரடியாக கிடைக்கும்.
இந்த பொருட்கள் தொடர்பான வரி விபரங்களை, ஜி.எஸ்.டி., போர்ட்டல் வாயிலாகவே சரிபார்த்து, வணிகர்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
அடிப்படையில் ஜி.எஸ்.டி., என்பது, வரி செலுத்துவோர் சுயமாகவே மதிப்பீடு செய்துகொள்ளும் வரி முறையாகவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, உள்ளீட்டு வரிப்பயன் பெறுவதற்கான தகுதியை வரி செலுத்துவோர்தான் உறுதி செய்ய வேண்டும்.
புதிய வசதியின் கீழ், பில் ஆப் என்ட்ரி ஆவணத்தின் ஜி.எஸ்.டி., எண் மாற்றப்பட்டால், ஏற்கனவே பெற்ற வரிப்பயனை திருப்பிச் செலுத்துவதற்கான நடைமுறையும் எளிமையாக்கப்பட்டுள்ளது.

