ADDED : ஆக 14, 2024 11:49 PM

புதுடில்லி: ரிசர்வ் வங்கி, கடந்த 2019 - 20 நிதியாண்டில் வெளியிட்ட மூன்றாம் கட்ட தங்கப் பத்திர கணக்கை முதிர்வுக்கு முன்னதாகவே முடிக்க விண்ணப்பித்தவர்களுக்கு, யூனிட் ஒன்றுக்கு 7,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளது.
இது வெளியிடப்பட்ட அன்று இருந்த விலையை விட, 100 சதவீதம் அதிகமாகும்.
மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015 நவம்பரில், தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது.
இதில், தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம். 1 கிராம் தங்கம், 1 யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும். தங்கப் பத்திரங்கள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஐந்தாவது ஆண்டுக்கு பிறகே, முதலீட்டை முன்கூட்டியே திரும்பப் பெற அனுமதிக்கப் படும்.
இதன்படி கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி வெளியிடப்பட்ட பத்திரங்களை நேற்று முதல் முதிர்வு காலத்துக்கு முன்கூட்டியே திரும்பப் பெறலாம். வெளியிடப்பட்ட போது ஒரு கிராம் தங்கம் 3,499 ரூபாயாக இருந்தது.
இந்நிலையில், தற்போது ஒரு கிராம் தங்கத்துக்கு 7,000 ரூபாய் வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதால், கிராம் ஒன்றுக்கு 3,501 ரூபாய் லாபம் கிடைக்கிறது. இது கிட்டத்தட்ட 100 சதவீதம் அதிகமாகும்.
கடந்த ஆகஸ்ட் 9, 12 மற்றும் 13ம் தேதிகளில், 24 காரட் தங்கத்தின் சராசரி விலையை கொண்டு இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.