ADDED : ஆக 02, 2024 12:36 AM

புதுடில்லி:மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை விலைகள் கண்காணிப்பில், மேலும், 16 அத்தியாவசிய உணவுப் பொருட்களை சேர்த்துள்ளதாக, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவாகரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:
மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை, ஏற்கனவே 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 550 விலை கண்காணிப்பு பிரிவு மையங்கள் வாயிலாக, 22 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை விலைகளை, தினசரி கண்காணித்து வருகின்றன. தற்போது இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பட்டியலில், மேலும் 16 உணவுப் பொருட்களையும் சேர்த்து, மொத்தம் 38 உணவுப் பொருட்களின் விலைகள் கண்காணிக்கப்பட உள்ளன.
இந்த 38 பொருட்களின் விலைகள் குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்க, இதற்கென பிரத்யேக மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு பற்றிய தகவல்களை பெற்று, விலைவாசி ஏற்ற, இறக்கத்தை நிலைப்படுத்துவதற்கு தேவையான கொள்கைகளை வகுப்பதற்கு இது உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோதுமை, மைதா, கேழ்வரகு, நெய், வெண்ணெய், முட்டை, கருப்பு மிளகு, கொத்தமல்லி, சீரகம், சிகப்பு மிளகாய், மஞ்சள் துாள், வாழைப்பழம் உள்ளிட்டவை புதிதாக இணைக்கப்பட்ட பொருட்களில் குறிப்பிடத்தக்கவையாகும்.