அம்பேத்கர் தொழில் திட்டத்தில் 2,136 நபருக்கு ரூ.247 கோடி கடன்
அம்பேத்கர் தொழில் திட்டத்தில் 2,136 நபருக்கு ரூ.247 கோடி கடன்
ADDED : ஏப் 26, 2024 11:51 PM

சென்னை: எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் தொழில் துவங்க, கடந்த ஆண்டில் துவக்கப்பட்ட அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின் கீழ், 2,136 நபருக்கு, 247 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த பயனாளிகளுக்கு அரசு, 160 கோடி ரூபாய் மானியம் வழங்குகிறது.
தமிழக அரசின் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் துறை, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் தொழில் துவங்குவதை ஊக்குவிக்க, மானியத்துடன் கடன் வழங்குவதற்காக, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை, 2023 மே மாதம் துவக்கியது.
இதற்காக பட்ஜெட்டில், 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், உற்பத்தி பிரிவில் உற்பத்தி சார்ந்த தொழில்களையும், சேவை பிரிவில் மென்பொருள் வடிவமைப்பு உள்ளிட்ட தொழில்களையும் துவக்கலாம்.
கடன் பெற, தொழில் வணிக ஆணையரகத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது, 18 முதல், 55க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் தொழில் திட்ட அறிக்கையை பொறுத்து, அதிகபட்சம், 1.50 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
அம்பேத்கர் தொழில் திட்டத்தின் கீழ், கடந்த நிதியாண்டில், 7,451 பேர் விண்ணப்பித்தனர். அதில், 2,136 நபருக்கு, 247 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அரசு வழங்கும் மானியம், 160 கோடி ரூபாய்.
இதுகுறித்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை இணை இயக்குனர் ஒருவர் கூறியதாவது:
அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் துவங்கிய ஓராண்டிலேயே, எதிர்பார்த்ததை விட அதிகம் பேர் விண்ணப்பித்தனர். எனவே, பட்ஜெட்டில் ஒதுக்கியதை விட கூடுதல் நிதி பெறப்பட்டது. நிலுவையில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு வரும் ஆண்டில் கடன் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

