
'சிறப்பு ரக உர ஏற்றுமதிக்கு சீனா மீண்டும் கட்டுப்பாடு விதிக்கும்'
சீனா, அடுத்த மாதம் முதல் பொட்டாஷ் உள்ளிட்ட சிறப்பு ரக உரங்களின் ஏற்றுமதிக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளதாக இந்திய உர தொழில் துறை சங்க தலைவர் ராஜிப் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். இதனால், வினியோக சிக்கல்கள் ஏற்படும் என்றும், விலை உயர்வால் விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தியாவுக்கான உர ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை சீனா அண்மையில் விலக்கியது. இந்நிலையில், “சீனா தற்போது வழங்கியுள்ளது இடைக்கால நிவாரணம் மட்டுமே. அடுத்த மாதம் முதல் மீண்டும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன. இந்தியா மட்டுமல்லாமல் அனைத்து நாடுகளுக்கான சிறப்பு ரக உர ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது. உடனடியாக மொத்தமாக நிறுத்தாமல், சோதனையை அதிகப்படுத்தி ஏற்றுமதியை காலதாமதமாக்குவதே அவர்களது திட்டம்,” என அவர் தெரிவித்தார்.
அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.35,000 கோடி பங்கு விற்பனை
அன்னிய முதலீட்டாளர்கள், 34,993 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய பங்குகளை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களில், இதுவே அன்னிய முதலீட்டாளர்களின் அதிகபட்ச பங்கு விற்பனை ஆகும். இந்திய பொருட்களின் இறக்குமதி மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு, இந்திய பங்குகளின் அதிக மதிப்பீடுகள் ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.
இதற்கு முன்னதாக கடந்த பிப்ரவரி மாதத்தில், அதிகபட்சமாக 34,574 கோடி ரூபாய் விற்பனை செய்திருந்தனர். ஆகஸ்ட் மாதத்துடன் சேர்த்து நடப்பாண்டில்,1.30 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்பனை செய்துள்ளனர்.