3 மாதத்திற்கு ஒரு முறை விலை நிர்ணயம்; பஞ்சு, நுால் ஜவுளி துறையினர் எதிர்பார்ப்பு
3 மாதத்திற்கு ஒரு முறை விலை நிர்ணயம்; பஞ்சு, நுால் ஜவுளி துறையினர் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 10, 2024 11:31 PM

திருப்பூர் : 'மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, பஞ்சு மற்றும் நுால் விலை நிர்ணயம் செய்து, மூலப்பொருள் தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்' என, ஜவுளித் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
உலகளாவிய ஜவுளி சந்தைகளில், நம் நாட்டில் உற்பத்தியாகும் பருத்தி நுாலிழை ஆடைகள் மற்றும் ஜவுளி ரகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இந்திய பருத்திக் கழகம் கொள்முதல் செய்த பஞ்சின் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் வந்துள்ளன.
பருத்திக் கழகம் கொள்முதல் செய்த பஞ்சு, நுாற்பாலைகளுக்கு மட்டுமே விற்கப்பட வேண்டும்; மொத்த வியாபாரிகளுக்கு விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், அளவுக்கு அதிகமாக பருத்தி விளைந்தாலும், நுாற்பாலைகள் அவற்றின் தேவைக்கு இறக்குமதி செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. மொத்த விளைச்சல், உள்நாட்டு தேவையை கணக்கிட்டு, ஒதுக்கீடு செய்ய வேண்டியது அவசியம் என்று ஜவுளித்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.
பருத்தி வர்த்தகத்தில் போக்குவரத்து செலவு அதிகம் என்பதால், மாநிலங்களுக்கு நான்கு இடங்களில் பருத்தி கிடங்கு அமைத்து, இருப்பு வைத்து விற்க திட்டமிடலாம். நம்மிடம் பருத்தியை வாங்கும் நாடுகளே, ஆடைகளை உற்பத்தி செய்து, நமக்கு போட்டியாக விளங்குகின்றன.
பருத்தியை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்த்து, கொள்முதலை கட்டுப்படுத்த வேண்டும். ஆண்டுதோறும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பஞ்சு மற்றும் நுால் விலை நிர்ணயம் செய்யும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.
பஞ்சு பதுக்கலும், செயற்கை தட்டுப்பாடும் இல்லாதவரை, ஜவுளித்தொழிலுக்கு மூலப்பொருள் தடையின்றி கிடைக்கும் என்பதால், ஜவுளி தொழில்களும் வளர்ச்சி பெறும். மத்திய அரசு, இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று ஜவுளித் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.